மக்களவையில் பேச லஞ்சம்? | லோக்பாலிடம் அறிக்கை சமர்ப்பித்த சிபிஐ.. மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கல்!
நாடாளுமன்றத்தில், அதானிக்கு எதிராகக் கேள்வி எழுப்புவதற்குப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா கடந்த காலங்களில் விசாரணையை எதிர்கொண்டார். இதனால், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதேநேரத்தில், இதுகுறித்து அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு ஊழல் தடுப்பு குறைதீர்ப்பு மன்றமான லோக்பால் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் மஹுவா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதற்கிடையே, அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று எம்பியாகி உள்ளார்.
இந்த நிலையில், மஹுவா தொடர்பான வழக்கில், சிபிஐ தனது அறிக்கையை லோக்பாலிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை லோக்பாலே முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், ’நாடாளுமன்றச் சலுகைகளை சமரசம் செய்ததற்காகவும், தனது மக்களவை உள்நுழைவு சான்றுகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதற்காகவும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் மற்றும் பிற தேவையற்ற சலுகைகளைப் பெற்றுள்ளார்’ என அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்துவதற்காக, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் இருந்து பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டதாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார்.
இதையும் படிக்க: பிஜு ஜனதா தள தலைவரை கரம்பிடித்த மஹுவா மொய்த்ரா? யார் இந்த பினாகி மிஸ்ரா?