தவெக விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கரூர் தவெக பரப்புரை | செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்த விஜய்!

கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாட்டு பாடி மறைமுகமாக விமர்சித்தார்.

PT WEB

கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாட்டு பாடி மறைமுகமாக விமர்சித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கிய தவெக தலைவர் விஜய், அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்டு கரூருக்குச் சென்றார். அங்கு பேசிய அவர், ”கரூர் அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் ஓர் ஊர். இங்கு மிக முக்கியமாக டெக்ஸ்டைல் மார்க்கெட் மிக ஃபேமஸ். இப்படி கரூரைப்பற்றி பெருமையாகச் சொல்ல ரொம்ப விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய சூழலில் கரூர் என்று சொன்னாலே ஒரே ஒரு பேர் தான் மிக ஃபேமஸாக ஜொலிக்கிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்தார்களே.. அதை முதலில் பார்த்துவிடலாம். கரூர் மாவட்டத்தில் பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.. பேரிச்சை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும் என்றார்கள். வாக்குறுதி 81. பேரிச்சை மரத்தை விடுங்கள். பேரிச்சை விதையையாவது கண்ணில் காட்டினார்களா? துபாய் குறுக்குச்சந்து கதைதான்.

tvk vijay

கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். வாக்குறுதி எண் 448. ஆட்சியே முடியப்போகிறது. இப்போது சென்று ஒன்றிய அரசிடம் அமைச்சர் கோரிக்கை விடுக்கிறார். அய்யா அமைச்சரே இதுதான் உங்கள் டக்கா? ஏர்போர்ட் வந்தால் ஜவுளித் தொழில் இன்னும் ஏற்றம் பெறும் என்பது உண்மையான விஷயம்தான். அதேநேரத்தில், மக்கள் பாதிக்காத வண்ணம் இடங்களை தேர்வுசெய்து ஏர்போர்ட் கட்ட வேண்டும். மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி. மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக ஆக்கிவிட்டதோடு அல்லாமல், சட்டவிரோத கல்குவாரிகள் கரூரில் கனிம வளத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு யார் காரணம் சிஎம் சார்? 11 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டால் 11.5 மணிக்கு மணல் கொள்ளை அடிக்கலாம் என வெளிப்படையாக சொன்னவர்கள்தானே உங்களது ஆட்கள். 2026இல் மணல் கொள்ளை அடிக்கிறவர்களிடம் இருந்து வரும் பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைப்பவர்களிடம் இருந்து காவிரித் தாய்க்கும், கரூருக்கும் விடுதலை வேண்டுமா.. வேண்டாமா?

தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி இங்கிருக்கும் பஞ்சபட்டி ஏரி. அந்த ஏரியின் பரப்பளவு 1000 ஏக்கருக்கும் மேல். அந்த ஏரி நன்றாக இருந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும். விவசாயம் செழிப்பாக இருந்தால் பல லட்சம் குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பல வருடமாக அதைச் சீர் செய்யாமல், அதற்கு தண்ணீர் வர வழியில்லாமல் செய்து வைத்திருக்கிறார்கள். நம் ஆட்சி, அதாவது உங்கள் ஆட்சி வரும்போது உங்கள் முகத்தில் சிரிப்பு, சந்தோஷம் மீண்டும் வரும். ஜவுளித் தொழில் கரூரை வளர்த்தெடுக்கிறது. இருந்தாலும், மக்கள் பாதிக்காதவண்ணம் ஜவுளித் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்க அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எந்த அரசும் எடுக்கவில்லை. நாம் அவற்றை முன்னெடுப்போம். கரூர்வரை வந்துவிட்டு அப்பிரச்னைகளுக்குக் காரணமானவரை பற்றிப் பேசாமல் போனால் நன்றாக இருக்காது அல்லவா? கரூர் மாவட்டத்தில் தற்போது இருப்பவர் மந்திரி அல்ல.. ஆனாலும், மந்திரி மாதிரி. சமீபத்தில் கரூரில் விழா ஒன்று நடத்தினார்களே. முப்பெரும் விழா.. அப்போது முதலமைச்சர் முன்னாள் அமைச்சரைப் பற்றி உச்சிமுகர்ந்து பாராட்டினாரே? இதே சிஎம் எதிர்கட்சியாக இருந்தபோது கரூருக்கு வந்தார்.

அப்போது அந்த முன்னாள் முதலமைச்சரைப் பற்றி என்னெவெல்லாம் பேசினார். திமுகவுக்கு இந்த முன்னாள் அமைச்சர் என்னவாக இருக்கிறார் என்று மக்கள் எப்படி பேசுகிறார்கள் தெரியுமா? திமுக குடும்பத்துக்கு ஊழல் செய்யும் பணத்தை எல்லாம் 24x7 கொடுக்கும் ஏடிஎம் மிஷினாக இருக்கிறாராம். இப்படி நான் சொல்லவில்லை, ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். இங்கு காவல்துறையினரின் பாதுகாப்பு எல்லாம் இருக்கிறதா, இல்லையா? காவல்துறையினரின் கைகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளது என நினைக்கிறேன். போலீஸ் சார் மக்கள் மட்டும்தான் எஜமானர்கள். இன்னும் 6 மாதம்தான். ஆட்சி மாறும்.. காட்சி மாறும். உண்மையான மக்களாட்சி அமையும். அப்போது, தெரியும்.. எல்லோருக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் 100% கிடைக்கும்” என்றார்.