2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். இரண்டாம் கட்டமாக நாகை, திருவாரூரில் கடந்த 20ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், 3ஆவது கட்டமாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், அதன்பிறகு சாலை மார்க்கமாக நாமக்கல் வந்தடைந்தார். அங்குள்ள சேலம் சாலை பகுதியில் காலை 11 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், வழியெங்கும் இருந்த மக்கள் திரள் காரணமாக பிற்பகல் 2.30 மணியளவில்தான் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து கரூர் செல்லும் விஜய், வேலுசாமிபுரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். விஜயின் பரப்புரைக்காக ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக செய்து வரும் நிலையில், காவல் துறையினர் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.