திருமாவளவன் pt desk
தமிழ்நாடு

அதிமுக தலைமையில் கூட்டணி என்றால் அமித்ஷா அறிவித்தது ஏன் – திருமாவளவன் கேள்வி

அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழி நடத்துகிறது என்று சொல்லக் கூடிய வகையில் கூட்டணியை அமித்ஷா அறிவிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருந்தால் அவரே சுதந்திரமாக இந்த முடிவை எடுக்கிறார் என நம்ப முடியும் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: விவேக்ராஜ்

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு புதுப்பிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர் சிலைகளை திராவிட கட்சித் தலைவர் கி.வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியபோது....

நான் பேசுகின்ற அரசியல் தான் திராவிட கழக அரசியல்:

நாம் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கிறோம் என விமர்சிக்கிறார்கள். திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். ஆளுங்கட்சியாக இன்று அது வீர நடை போடுகிறது. அந்த இயக்கத்திற்கு இன்னொரு கட்சி முட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை அப்படி அந்த இயக்கம் பலவீனமாக இல்லை. நான் பேசுகின்ற அரசியல் தான் திராவிட கழக அரசியல், நாம் பேசுகின்ற அரசியல் தான் திராவிட முன்னேற்றக் கழகம் பேசுகின்ற அரசியல். இதுதான் பெரியார், அம்பேத்கர் அரசியல். தனிப்பட்ட முறையில் திமுகவை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதனை திமுக எதிர்கொள்ளும். அவர்களும் நாமும் பேசுகின்ற அரசியலை விமர்சிக்கிறார்கள் என்றால் அதனை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

விசிக பலவீனமாக இல்லை என்பதை புரிந்து கொண்டார்கள்:

நம்மிடத்திலே ஆசை காட்டினார்கள் உங்களுக்கு கூடுதலான தொகுதிகளை பெற்றுத்தர முடியும். ஆட்சியிலேயே பங்கு தர முடியும் நீங்கள் திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள். சராசரியான இந்த அரசியல் நகர்வுகளுக்கு ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இடம் கொடுத்ததில்லை. அப்படிப்பட்ட ஊசலாடுகின்ற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இல்லை. அசைத்துப் பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. வளைந்து கொடுப்பதனால் முறித்து விடலாம் என முயற்சித்துப் பார்த்தார்கள் வளைந்து கொடுப்பதெல்லாம் முறிந்து விடாது. அப்படி அது பலவீனமாக இருக்காது என புரிந்து கொண்டார்கள்.

aidmk - bjp

அவ்வளவு இலகுவாக என்னை உடைத்தும், உரித்தும் விட முடியாது:

திருமாவளவன் "ஆழசந குடநஒைடிடந' டீரவ ஆழசந ளுவசழபெ' அது பலருக்கு தெரியாது. நான் மிகவும் வளைந்து கொடுப்பவன்தான் ஆனால், அவ்வளவு இலகுவாக என்னை உடைத்து விட முடியாது, உரித்து விட முடியாது, உடைத்து விட, தகர்த்து விட முடியாது என்பதை காலம் அவ்வப்போது அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. என்னை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைத்து விடலாம் என பலரும் கனவு கண்டு தோற்று போனவர்கள் இன்று பழைய யுத்தியை கையில் எடுத்திருக்கிறார்கள்.

கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாக்குகிறது என்றால் எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்திருக்க வேண்டும்:

அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழி நடத்துகிறது என்று சொல்லக் கூடிய வகையில் கூட்டணியை அமித்ஷா அறிவிக்கிறார். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா அறிவிக்கிறார். அதிமுக தான் தலைமை தாக்குகிறது என்றால் எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்திருக்க வேண்டும். நாங்களும் பாஜகவும் கூட்டணி வைக்கிறோம். பாஜகவில் நாங்கள் கூட்டணி வைத்ததற்கு என்னென்ன காரணங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க அதிமுக உடன்படுகிறது என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருந்தால் அவரே சுதந்திரமாக இந்த முடிவு எடுத்துக் கொள்கிறார் என நம்ப முடியும். ஆனால், அவரை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு அமித்ஷா பேசுகிறார்.

amit shah, edappadi palaniswami

பெரியாரையும், அம்பேத்கரையும் வீழ்த்தி விட வேண்டும் என நினைக்கிறார்கள்:

கூட்டணியை நாங்கள் அமைத்து விட்டோம் என்கிறார் கூட்டணி ஆட்சி உருவாக்கப் போகிறோம் என்கிறார் திமுகவை அகற்றுவோம் என்கிறார் இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தால் அது சரி. ஆனால், அமித்ஷா பேசுகிறார். பெரியாரையும், அம்பேத்கரையும் வீழ்த்தி விட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. இதனால் அரசியல் ரீதியாக உனக்கு லாபம் இல்லையே, எல்லா கதவுகளையும் மூடிவிட்டு நீ எப்படி திமுகவோடு பேரம் பேச முடியும். கூடுதல் இடங்களை பெற முடியும். எப்படி நீ அதிகாரத்திற்கு வர முடியும் என்ற கேள்வி எழுப்புகிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அம்பேத்கரின் அரசியல் மகத்தானது:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட, அம்பேத்கரின் அரசியல் மகத்தானது அதை பாதுகாக்க வேண்டும். இதனை பாதுகாத்து இந்த இயக்கம் வீரநடை போடுமேயானால் விடுதலை சிறுத்தை கட்சியை ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும். அந்த காலம் கனியும். 2026ல் நமக்கு ஒரு சோதனை. அவர்கள் திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது திராவிட அரசியலை வீழ்த்துகிற முயற்சி அல்ல ஒட்டு மொத்தமாக சமூக நீதி அரசியலை வீழ்த்துகிற முயற்சி.

அதிமுக - பாஜக

அதிமுகவை மெல்ல மெல்ல தேய வைப்பது பாஜகவின் உத்தி:

அதிமுகவோடு இன்று கூட்டணி வைத்து 50, 60 தொகுதிகளை அடாவடியாக தட்டிப் பறித்து அதில் போட்டியிட்டு அதிமுக வாக்குகளை எல்லாம் பெற்று அது எங்களுடைய வாக்குகள் என்று காட்டிக் கொள்ளும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. அதேபோல் அதிமுகவை மெல்ல மெல்ல தேய வைப்பது, கரைய வைப்பது நீர்த்துப் போகச் செய்வது வீழ்த்துவது என்ற உத்தியை கையாள்கிறது. அவர்கள் ஒரு திராவிட இயக்கத்தை வீழ்த்தி விட்டால், இரண்டாவதாக பெரிய சக்தியாக வளர்ந்துவிட்டால், அடுத்து திமுக வீழ்த்தி விட முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். அதற்கு ஒரு போதும் சிறுத்தைகள் இடம் கொடுக்க மாட்டோம். அப்படி இடம் கொடுக்க மாட்டோம் என்பது திமுகவிற்காக அல்ல. பெரியார் மற்றும் அம்பேத்கரின் அரசியலுக்காக.

திராவிட முன்னேற்ற கழகம் தன்னை தற்காத்துக் கொள்கிற வலிமையுடன் களத்தில் இருக்கிறது. அதற்கு நாம் எந்த வகையிலும் துணை நிற்க வேண்டிய தேவையில்லை. ஆனால் எதிரிகள் அந்த பெயரைச் சொல்லி பெரியார் அம்பேத்கர் அரசியலை வீழ்த்த பார்க்கிறார்கள் அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.