நயினார் சொன்ன ஒரே வார்த்தை... அண்ணாமலை செய்த சம்பவம்! மேடையில் நடந்தது என்ன..?
‘‘திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்’’ அண்ணாமலை சபதம்:
கடந்த 2024 டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப்ஐஆர் காப்பி பொது வெளியில் கசிந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. அப்போது கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இந்த விவகாரத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி ‘‘திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்’’ என சபதம் ஒன்றையும் எடுத்துக்கொண்டார்.
நயினார் நாகேந்திரன் கோரிக்கை:
அதனைதொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அண்ணாமலை காலணி அணிவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் விழா மேடையில் பேசினார், ‘‘திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என் அண்ணாமலை சபதம் ஏற்றார். ஆட்சி மாற்றத்துக்காக அமித் ஷா அடிக்கல் நாட்டிவிட்டார். அதனால், அண்ணாமலை மீண்டும் காலணி அணிந்துகொள்ள வேண்டும்’’ என வேண்டுகோள் வைத்தார்.
நெட்டிசன்கள் கமெண்ட்:
அதுமட்டுமின்றி புதிதாக வாங்கி வந்த காலணியை அண்ணாமலையிடம் கொடுத்தார். அடுத்த நொடியே நயினார் நாகேந்திரன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு நயினார் கொடுத்த காலணியை வாங்கி அணிந்து கொண்டார் அண்ணாமலை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலரும் "தனது சபதத்தை முடித்துக்கொண்டாரா அண்ணாமலை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.