2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் ஜன 6ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவையில் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார்.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சபாநாயகர், அவை முன்னவர், அமைச்சர்கள் என பலரும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்தனர். தமிழக சட்டப்பேரவை மரபை பின்பற்றி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதும், இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதும் வழக்கம், அதுவே பின்பற்றப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியதை “சிறுபிள்ளைத் தனமானது” என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், முதல்வரின் விமர்சனத்திற்கு இன்று ஆளுநர் மாளிகை பதிலளித்திருந்தது.
அந்த பதிவில், “முக ஸ்டாலின் அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளது.
இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளான நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பொங்கல் விழாவில் முதலில் தேசியகீதம் பாடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை அணிந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த விழாவில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு, பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது.