“இத்தகைய ஆணவம் நல்லதல்ல” - முதல்வரின் பதிவுக்கு ஆளுநர் மாளிகை காட்டமான எதிர்வினை!
2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் ஜன 6ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அனைத்து மரியாதைக்கும் பின் பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்ற சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில நிமிடங்களில் விளக்கமொன்று அளிக்கப்பட்டது. அதில், “இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்பது அளிக்கப்பட்டது.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சபாநாயகர், அவை முன்னவர், அமைச்சர்கள் என பலரும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்தனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அன்றைய தினமே ஆளுநரை விமர்சித்தார்.
இதுதொடர்பாக தன் பதிவில் முதல்வர், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர்.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியிருந்தார்.
முதல்வரின் இந்த பதிவுக்கு, ஆளுநர் மாளிகை இன்று (ஜனவரி 12) பதிலளித்துள்ளது. தன் எக்ஸ் பக்கத்தில் ஆளுநர் மாளிகை, “திரு. ஸ்டாலின் அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் ‘அபத்தமானது’ மற்றும் ‘சிறுபிள்ளைத்தனமானது’ என்று வற்புறுத்துகிறார்.
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” என்றுள்ளது.