”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” - தவெக தலைவர் விஜய்
2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அனைத்து மரியாதைக்கும் பின் பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில நிமிடங்களில் விளக்கமொன்று அளிக்கப்பட்டது. அதில், ”இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் தேசிய கீதத்திற்கு மரியாதை கிடைக்காத இடத்தில் உறுப்பினராக இருக்க கூடாது என்பதற்காகவே ஆளுநர் வெளியேறினார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு பதலளித்த பேரவை முன்னவர் துரைமுருகன், ”தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது குறித்து ஏற்கனவே ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதாகவும், சட்டப்பேரவை மரபின் படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது பின்பற்றப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.
சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும்..
சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறிய சம்பவம் குறித்து பேசியிருக்கும் தவெக தலைவர் விஜய், சட்டப்பேரவை கூட்டத்தில் மக்களின் பிரச்னைகளே விவாதிக்கப்பட வேண்டும் என்றும், ஆளுநர் தமிழக சட்டப்பேரவையின் மரபை காக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மீது மரியாதை உள்ளது..
தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் விவகாரம் குறித்து செய்தியறிக்கை மூலம் ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கமளித்துள்ளது.
அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் செய்தியில், “தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு எப்போதும் மரியாதை உள்ளது. தமிழ் கலாச்சாரத்தின் மீது அன்பும், மரியாதையும் இருக்கிறது, தனது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்த் தாய் வாழ்த்தை ஆளுநர் பாடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் “ஒவ்வொரு மாநில பேரவையிலும் ஆளுநர் உரையின்போது தேசியகீதம் இசைக்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு முன்பும் மற்றும் முடிந்த பின்னரும் தேசிய கீதம் இசைக்கப்படும். இதுகுறித்து முன்பே பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அரசமைப்பின் கடமைகளை பின்பற்ற வேண்டியது ஆளுநரின் கடமை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.