1925-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுகளின் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமான அதே நாளில் பிறந்த நல்லகண்ணு, தனது இளம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். அவரது தந்தை ராமசாமி நிலச்சுவான்தாரராக இருந்ததுடன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கும் 'ஜூரி' உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். நல்லக்கண்ணுவின் அண்ணன் சுப்பு, சுங்கத்துறையில் உயரிய பதவியான டெபுடி கலெக்டராகப் பணியாற்றினார். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தும் எளிய மக்களிடன் வாழ்க்கையையே தனது வாழ்க்கையாக தேர்வு செய்தார், நல்லகண்ணு. பள்ளி மாணவராக இருந்தபோதே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, மாணவர்களைத் திரட்டி ஊர்வலங்கள் நடத்துவது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது பல்வேறு இடங்களில் கிடைக்கும் உணவை உண்டு, கிடைக்கும் இடத்தில் உறங்கி தலைமறைவு வாழ்கையை மேற்கொண்டார். இதனிடையே நெல்லைச் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் சிறையில் பல்வேறு கொடுமைகளை அவர் அனுபவித்ததாக அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதன் பின்னர் சிபிஐ கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர் முதல் அகில இந்திய அளவில் கட்சிப் பதவிகளை அவர் அலங்கரித்த நிலையில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் எப்போதும் எளிய மக்களுக்கான போராட்டங்களிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
பெரிய கட்சிகளின் கவுன்சிலர்களே பெரும் பண்ணையார் தனத்தோடு பகட்டோடு வலம்வரும் நிலையில், இந்திய அளவில் முக்கிய தலைவரான நல்லகண்ணு கட்சி கொடுக்கும் வாகனத்திலும், பொதுப் போக்குவரத்தையுமே கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தார். 1999 தென் மாவட்ட கலவரத்தின்போது, நல்லகண்ணுவின் மாமனார் அன்னச்சாமி வெட்டிக்கொல்லப்பட்டபோது, மாமனார் மரணத்துக்கு அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகையை அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூகக் குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.
நீண்டநாட்களாக தி.நகர் பகுதியில் இருந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நல்லகண்ணு வசித்துவந்த நிலையில், அது மிகவும் பழுதாகி இருந்ததால், அதில் குடியிருந்தவர்கள் காலி செய்யும்படியும், குடியிருப்போருக்கு பொது ஒதுக்கீட்டில் அரசு வேறு வீடு வழங்கும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. இங்கு குடியிருந்த நல்லகண்ணு தாமாகவே முன்வந்து வீட்டை காலி செய்வதாக தெரிவித்தார். அவருக்கு தனி வீடு கொடுக்க தமிழ்நாடு அரசு முன்வந்தும் அதனை மறுத்த அவர், சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பாக அவருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் வாடகை கொடுத்தே கடைசிவரை வசித்து வந்தார்.
அவரது 80ஆவது வயதில், சிபிஐ கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டு ஒரு கோடி ரூபாய் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதே மேடையில் அந்த நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக வழங்குவதாக அறிவித்தார். தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயையும் வழங்கியபோதும், பாதியைக் கட்சிக்கும், மீதியை தான் பல ஆண்டுகள் உழைத்த விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் வழங்கினார்.
அதேபோல 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருது தோழர் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அரசு வழங்கிய விருது தொகை 10 லட்சம் ரூபாயுடன் மேலும் 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கே திருப்பி வழங்கினார் நல்லக்கண்ணு. இப்படி எளிமையின் சிகரமாக விளங்கிய நல்லகண்ணுவின் இழப்பு தமிழ்நாட்டுக்கான மாபெரும் இழப்பு என்பதே உண்மை.