தனக்கு வந்த நிதியையும் திருப்பிக் கொடுத்த நவீன வள்ளல்.. விடைபெற்றார் நல்லகண்ணு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா்.நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.25) காலமானார்.
விடைபெற்றார் நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் அவர் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுடன் தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வயது மூப்பு காரணமாக அவ்வப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், திடீர் மூச்சுத் திணறல் காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதி இரவு, நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் வேறு உடல்நலப் பிரச்னைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாகச் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (பிப்.25) காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த நல்லகண்ணு?
1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு, சிறுவயதிலிருந்தே போராட்டக் களத்தில் ஈடுபட்டவர். 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் இயங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட இந்தச் சதி வழக்கில் நல்லகண்ணுவும் சேர்க்கப்பட்டார். இதற்காக அவர் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது, அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கியிருந்தனர். தமிழக மக்களின் போராட்டத்திற்காக தன்னுடைய வாழ்வைக் கழித்த அவருக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதுடன் அவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
ஆனால், அதனுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார். முன்னதாக, அவரது 80வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அதை அந்த மேடையில் வைத்தே கட்சிக்கே அதைத் திருப்பி கொடுத்தவர் நல்லகண்ணு. தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதற்கு முன்பு, தமிழக அரசு நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருதுடன் ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்து அழகு பார்த்தவர் நல்லகண்ணு. இப்படி, எதையுமே தனக்காகவும் தனது குடும்பத்திற்கும் எடுத்துக்கொள்ளாத அந்த நல்ல மனம்தான் இன்று இந்த மண்ணைவிட்டுப் பிரிந்திருக்கிறது.

