அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மனக்கசப்பு நீடித்து வந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருந்தார். இதற்காக அவர், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட பிறகு, புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ”தர்மம் தழைக்க வேண்டும் என்றும், அதிமுக மாபெரும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு தனது கருத்துகளை வெளிபடுத்தினேன். தொடர்ந்து, என்னை கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்கியதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதை நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், என்னுடைய கருத்து குறித்து விளக்கம் கேட்காமலேயே என்னை நீக்கியிருக்கிறார்கள். என்னுடைய நீக்கத்திற்கு காலம் பதில் சொல்லும். தொடர்ந்து என்னுடைய அதிமுக ஒருங்கிணைப்பு பணிகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாகப் பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். அவரைப் பதவியில் இருந்து நீக்கியது, செங்கோட்டையனுக்கு பின்னடைவு அல்ல. அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ”செங்கோட்டையன் பேட்டி உட்கட்சி விவகாரம். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. பாஜக - அதிமுக ஒன்றிணைந்திருப்பதையே விரும்புகிறது” என்றார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசிய பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “இது, அதிமுகவுக்கும் பின்னடைவு; அமித் ஷாவின் வியூகத்துக்கும் பின்னடைவு” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொங்கலூர் மணிகண்டன், “கட்சிக்கு விரோதமாக யார் பேசினாலும் இதுபோன்று நடவடிக்கைதான் வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அந்த தொண்டர்கள் விருப்பத்தை மிகச் சரியாக அதிமுக பொதுச் செயலாளர் மேற்கொண்டிருக்கிறார். இதை மிக மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்
- பிரேம்குமார்