தமிழ்நாடு அரசு - ஆன்லைன் மோசடி file photo
தமிழ்நாடு

தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் ரூ.22.10 கோடி மாயம்.. திருட்டா? சைபர் குற்றவாளிகள் கைவரிசையா?

தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் குற்றப்பிரிவு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

PT WEB

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி மாயம். சைபர் குற்றவாளிகள் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், முறைகேடா? அல்லது ஆன்லைன் திருட்டா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி இணையவழியில் மாயமாகியிருப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சைபர் கிரைம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடியும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடியும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியும் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் ரூ.22.10 கோடி கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிதி, 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் கிராமப்புறங்களில் சுகாதார நல மையங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டதாகும். தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மையங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

என்ன நடந்தது?

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சென்னையில் இருந்து நிர்வகிக்கப்படும் மாநில அளவிலான ஒற்றை வங்கிக் கணக்கு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்ததற்கான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த பின்னரே நிதி விடுவிக்கப்படும். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கிலிருந்தும் ரூ.8.85 கோடி இணையவழியில் திருடப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்திலும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெற்றுள்ள இந்த மோசடிகளுக்கு ஒரே கும்பல் தொடர்புடையதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசின் முக்கியத் திட்டங்களுக்கான நிதியே குறிவைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.