ரயில்களின் ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் பொருட்கள்.. அதிகரிக்கும் திருட்டு.. ரூ.104 கோடி இழப்பு!
ரயில்வே ஏசி பெட்டிகளில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் பலர் போர்வை, தலையணை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதால் 104 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 54 ரயில்வே கோட்டங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் அம்பலமாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று ஆர்டிஐ வாயிலாக எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அளித்துள்ள பதில்களில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் இந்தப் படுக்கை உபகரணங்கள் திருட்டுச் சம்பவங்கள் 56% அதிகரித்துள்ளன.
ரயில்வே அளித்த தரவுகளின்படி 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரை ரயில்களில் இருந்து 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள படுக்கை விரிப்புகள், 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தலையணை உறைகள், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்பளிகள், இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் மத்திலான தலையணைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்த திருட்டில் 67% சம்பவங்கள் வெறும் 10 ரயில்வே கோட்டங்களில் மட்டுமே நடந்துள்ளன. குறிப்பாக ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் உள்ள கோட்டங்களில் திருட்டு அதிகம். பிகானேரில் 25.76 லட்சம் பொருட்களும், ராஞ்சியில் 9.31 லட்சம் பொருட்களூம், மும்பையில் 8.17 லட்சம் பொருட்களும், ஜோத்பூரில் 8.09 லட்சம் பொருட்களும் அகமதாபாத்தில் 6.94 லட்சம் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.மேலும் டெல்லி, சோன்பூர், தானாப்பூர் மற்றும் பிலாஸ்பூர் ஆகிய கோட்டங்களும் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளன.
இந்த திருட்டுகளால் ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு 104 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், திருச்சி, பாலக்கோடு கோட்டங்களில் திருட்டே நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மறுபுறம், துரதிர்ஷ்டவசமாக இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, ரயில்களில் பணிபுரியும் தற்காலிக ஏசி கோச் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து இந்தத் தொகை கழிக்கப்படுவதாக ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தத் திருட்டுகளைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் சிசிடிவி கண்காணிப்பு, திடீர் சோதனைகள் மற்றும் 'Coach Mitra' ஆப் மூலமாக உபகரணங்களைக் கண்காணிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

