அலுவலகத்துக்கு நடந்து வந்த டிஎஸ்பி pt web
தமிழ்நாடு

கார் கொடுக்காமல் மறுத்த மாவட்ட காவல்துறை..? நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி!

மயிலாடுதுறை மாவட்ட டிஎஸ்பி வாகனத்தை மாவட்ட காவல்துறை பறித்து கொண்டதால் அவர், ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே அலுவலகம் சென்ற காட்சிதான் பொதுமக்களை கலங்கடித்துள்ளது.

PT WEB

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் பொறுப்பெற்று கொண்டார். இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து சட்டவிரோத மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளார். அதேபோல சட்டவிரோத சாராய விற்பனை மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை சிறையில் அடைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தொடர் மது கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கையும் எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டிஎஸ்பி சுந்தரேசன் மயிலாடுதுறை மாவட்ட மது கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்..

இந்த நிலையில் டிஎஸ்பி சுந்தரேசனுக்காக வழங்கப்பட்ட அரசு வாகனத்தை மாவட்ட காவல்துறை பறித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு சென்றிருந்தார். முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சரின் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்ட போது, அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை அப்போது பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு மாவட்ட காவல்துறை அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியானது. அங்கு பாதுகாப்பு பணியயை முடித்து விட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு பணிக்கு திரும்பிய போது, அவருக்கு வாகனத்தை அனுப்பாமல் மாவட்ட காவல்துறை அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்நிலையில் இன்று டி.எஸ்.பி சுந்தரேசன் தனது வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல வாகனம் வழங்கவில்லை என்பதால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.. நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை அதிகாரி சாலையில் நடந்து சென்ற காட்சிகள் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என பல்வேறு வழக்குகளில் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய சுந்தரேசன் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வாகனம் வழங்கப்படாதது குறித்து மாவட்ட காவல்துறையில் விளக்கம் கேட்டபோது, "அவரது வாகனம் பழுது காரணமாக ரிப்பேர் செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.