இஸ்ரேல் | கூட்டணிக் கட்சிகள் விலகல்.. பிரதமர் நெதன்யாகுவிற்கு பின்னடைவு!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 57,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மறுபுறம், காஸாவில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசர உதவிகள்கூட கிடைக்காமல் பட்டினியில் சாகும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து ஐ.நா. தொடர்ந்து தனது கவலைகளைப் பதிவு செய்து வருகிறது. மேலும், காஸா மீதான தொடர் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கடந்தாண்டு கைது ஆணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி நேற்று விலகுவதாக அறிவித்துள்ளது. மதக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கியக் காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் இராணுவ கட்டாயப்படுத்தல் தொடர்பான விவாதம் காரணமாக இந்தப் பிரிவு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மக்கள்தொகையில் 13% ஆக இருக்கும் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் (ஹரேடிம்), வரலாற்றுரீதியாக மதப் படிப்பைத் தொடர சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை, கடந்த ஆண்டு இஸ்ரேலின் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. இஸ்ரேல் உச்ச நீதிமன்றம், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய இராணுவச் சேவை மசோதாவை உருவாக்க நாடாளுமன்றம் முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையே காஸாவில் 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாலும், வீரர்கள் பற்றாக்குறை அதிகரித்ததாலும், விலக்குகள் மீதான பொதுமக்களின் கோபம் அதிகரித்தது. இதன் காரணமாகவே கூட்டணிக் கட்சி விலக ஆரம்பித்தது.
மேலும் ஷாஸ் கட்சி விலகுவதற்கு ஒருநாள் முன்னதாக, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது. இந்த இரண்டு முக்கியக் கட்சிகளின் விலகல், நெதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதன் பெரும்பான்மையை நிரூபிக்க 61 இடங்கள் தேவை. ஷாஸ் கட்சியின் 11 உறுப்பினர்கள் விலகியதன் காரணமாக, தற்போது நெதன்யாகுவின் கூட்டணிக்கு 50 இடங்களே உள்ளது. இது பெரும்பான்மைக்கு கீழ் என்று சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், ஷாஸ் கட்சியினர், நெதன்யாகு ஆட்சியைக் கவிழ்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். காஸாவுடன் தொடர்ந்து மோதல், பாலஸ்தீனியர்களை அகற்ற நடவடிக்கை, ஈரானுடன் பதற்றம் எனப் பல்வேறு பிரச்னைகளைச் சமாளிக்கும் இஸ்ரேலுக்கு, தற்போது கூட்டணிக் கட்சிகள் விலகியிருப்பது நெதன்யாகுவுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.