”இஸ்ரேல் அமெரிக்காவின் நாய்” - கடுமையாக விமர்சித்த ஈரான் தலைவர் கமேனி!
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்த ஈரான், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இஸ்ரேலிய குற்றங்களுக்கு அமெரிக்கா துணை போயிருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி ஹொசைனி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் போல உள்ளது. அதன் உத்தரவுகளின்படி இஸ்ரேல் விளையாடுகிறது. அது செய்யும் குற்றங்களுக்கு அமெரிக்கா துணை போகிறது. ஈரானில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே இஸ்ரேலின் குறிக்கோள். போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலை நம்ப முடியாது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், கடந்த மாதத்தைப்போல கடுமையாக பதிலடி கொடுப்போம். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இஸ்ரேல் இன்னும் கடுமையான அடிகளைச் சந்திக்கும். மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து வருகிறது. இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.