ஒரு கட்சியால் தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டிவருகிறது. 'ஆரம்பம் முதலே தாம் கட்சிக்குப் பாடுபட்டதால் நான் சொல்வதே சரி என்றும், அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும்' என்கிறார், ராமதாஸ். ஆனால், அவருக்கு எதிராகக் கட்சி நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபடுவதாக மற்றொரு பக்கம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக பாமக இரண்டு அணிகளாக உள்ளது.
இதற்கிடையே, ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை நடத்தின. அதன்படி, ஆகஸ்ட் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸே கட்சியின் தலைவராக நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ராமதாஸும், அவரது தரப்பும் பங்கேற்கவில்லை. அவருக்காக நாற்காலிகூடப் போடப்பட்டிருந்தது. மேலும், இக்கூட்டத்தில், ராமதாஸை எதிர்த்து யாரும் பேசவில்லை என்றாலும், ராமதாஸுக்கு இனி பாமகவில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இந்தப் பொதுக்குழு பிரகடனப்படுத்தியது. முன்னதாக, இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ராமதாஸின் மனுவையும் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மேலும், கூட்டத்தில் 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவை, பாமக முழுமையாக ராமதாஸின் கையிலேயே இருப்பதை உறுதிபடக் கூறுபவையாக இருந்தன. அதாவது, பாமகவின் கட்சி விதிகளில் முக்கியமான சில திருத்தங்களை மேற்கொண்டு, தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் என முக்கிய அதிகாரங்கள் அனைத்தையும் இந்தப் பொதுக்குழுவின் வழி தன் வசம் கொண்டுவந்துள்ளார் ராமதாஸ்.
தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழுவும் அறிவிக்கப்பட்டது. மறுபுறம், வழக்கமாக பாமக பொதுக்குழு மேடைகளில் அன்புமணி அமரும் இருக்கையில், அதாவது நிறுவனர் ராமதாஸுக்கு அருகில் உள்ள் இருக்கையில், இந்த முறை அவரது மகள் காந்திமதி அமரவைக்கப்பட்டிருந்தார். அவருக்கு வீரவாளும் பரிசளிக்கப்பட்டது. மேலும், இளைஞரணி பதவியிலிருந்து விலகிய அவரது மகன் முகுந்தனை காந்திமதி மேடைக்கு அழைத்தபோதும், அவர் மறுத்துவிட்டார். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்தபோதுதான், அன்புமணிக்கும் ராமதாஸ்க்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமையும்" என்ற அறிவிப்போடு நிறுத்திக்கொண்டார். மேலும், அன்புமணிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராமதாஸ் தயாராகி வருவதும் இதன்மூலம் தெரியவந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி மீது அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், நடவடிக்கை குறித்து நிறுவனர் ராமதாஸே முடிவு எடுப்பார் என அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமையும்ராமதாஸ், பாமக நிறுவனர்
அதேநேரத்தில், பட்டானூரில் நடத்தப்பட்ட கூட்டம், பாமக பொதுக்குழு அல்ல என்றும், அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனவும் அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். “பாமகவின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாமக பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்” என கே.பாலு குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்து வரும் அன்புமணி, அடுத்து என்ன செய்யப்போகிறார், எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பதையே தமிழக அரசியல் களம் உற்று நோக்குகிறது.