ராமதாஸ் கூட்டத்தில் மகள் காந்திமதி.. அன்புமணிக்கு எதிராக தீர்மானம்! ஒரே நாளில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!
செய்தியாளர் - காமராஜ்
பாமகவில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்குமான மோதல் போக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருவருக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் பாமகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளும், மருத்துவர் ராமதாஸின் குடும்பத்தினரும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகிறது.
ராமதாஸ் அணி, அன்புமணி அணி.. முற்றும் மோதல்
இந்த நிலையில் என் உயிர் மூச்சு உள்ள வரை நான்தான் பாமகவிற்கு தலைவராக இருப்பேன் என்றும் தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்க மாட்டேன் என்றும் செயல் தலைவராக பணியாற்ற அன்புமணி முன் வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் பாமக வட்டாரத்தில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமகவில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதேசமயம், ராமதாஸால் நீக்கப்படும் நிர்வாகிகள் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்கள் என அன்புமணி கூறியுள்ளதால், பாமகவில் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு பிரிவுகளாக செயல்படும் நிலைக்கு பாமக தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே பாமகவின் தலைமை நிர்வாக குழுவில் அங்கம் வகித்து வந்த அன்புமணியையும், அவரது ஆதரவு ஆதரவாளர்களையும் மருத்துவர் ராமதாஸ் நீக்கினார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் பாமகவின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ராமதாஸின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும், இந்தக் கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டித்தக்கது. நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டித்தக்கது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திடீரென ராமதாஸ் கூட்டத்தில் மேடையேறிய மகள் காந்திமதி
ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் அன்புமணியின் புகைப்படங்களோ அல்லது அவரது பெயரோ இடம்பெறவில்லை. மறுபுறம், இந்தச் செயற்குழு கூட்டத்தில் திடீரென பங்கேற்ற மருத்துவர் ராமதாஸின் மூத்தமகள் ஸ்ரீகாந்திமதி, மேடையில் அமரவைக்கபட்ட சம்பவம் கட்சியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து பேசிய ராமதாஸ், ”96 ஆயிரம் கிராமங்கள் சென்று கட்சியை வளர்த்திருக்கிறேன். என் வலியைப் புரிந்தவர்கள், உணர்ந்தவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். அதற்கான அதிகாரத்தினை எனக்கு வழங்கி உள்ளனர். நிர்வாகக் குழுவில் இந்த அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுவிட்டது.
தேர்தலில் வெற்றபெற வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள். தேர்தலில் போட்டியிட ஏ பார்ம், பி பார்மில் கையெழுடுத்திடும் அதிகாரம் எனக்கே உள்ளது. சந்தேகப்பட்டவர்களுக்குச் சந்தேகம் தீர்ந்து இருக்கிறது. சந்தேகம் பட்டவர்களுக்கு மருந்து கிடைத்திருக்கிறது. இங்கு வந்தவர்களுக்கு விருந்து கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
ராமதாஸ்-க்கு அன்புமணி உடனடி கூட்டம்!
இதற்கிடையே, பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்க செயலாளர் வைத்தி உள்ளிட்ட அன்புமணி தரப்பு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்று தினங்களுக்கு முன்பாக ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அன்புமணி தரப்பு நிர்வாக குழுவை கூட்டியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கு தொடங்கியதற்குப் பிறகு இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவது அக்கட்சி நிர்வாகிகளிடையேயும், தொண்டர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.