ராகுல் டிக்கி pt web
தமிழ்நாடு

ராகுல் டிக்கியின் உயிரிழப்பு.. நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்.. வேகமாக பரவும் கமெண்ட்..

யுடியூபர் ராகுல் டிக்கியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதைப் பார்த்த நபரது கமெண்ட் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

திவ்யா தங்கராஜ்

ஈரோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராகுலின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என விபத்தை நேரில் பார்த்த ஒருவரின் சமூக வலைதள பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது.

Rahul Tiky

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவரது ஒரே மகனான பொறியியல் பட்டம் பயின்ற ராகுல், டிக்-டாக் மூலம் பிரபலமாகி கடந்த சில வருடங்களாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இரண்டு வருடங்களில் இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்து 89ஆயிரம் ஃபாலோவர்ஸ்களைப் பெற்றுள்ளார். இதே போன்று யூ-டியூப்பில் 2லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களைப் பெற்றுள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு அருகே கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த தேவிகாஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று இருந்த தன் மனைவியை பார்க்க கவுந்தப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் ராகுல். அப்போது சாலையின் வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது. இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த கவுந்தப்பாடி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து ராகுல் டிக்கி உடல் சொந்த ஊரான ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள அல் அமீன் தர்காவில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்களை விட அவரின் ஃபாலோவர்ஸ் மற்றும் சக யூடியூபர் பலர் கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

வேகமாக பரவும் கமெண்ட்

தற்போது விபத்திற்கு முன் ராகுல் அதிவேகமாக பைக்கில் வந்தது, அதன் காரணமாக விபத்து நடந்தது என அனைத்தையும் நேரில் பார்த்த நபர் சமூகவலைதளத்தில் அதுகுறித்து பதிவு ஒன்றிற்கு கமெண்ட் செய்துள்ளார். அதில் அவர் "இவர் அன்று இரவு 9:45 மணிக்கு சித்தோட்டில் எங்கள் பேருந்தைப் படு ஸ்பீடாக ஓவர் டேக் செய்தார். இவ்வளவு ஸ்பீடு தேவையா என கூறிக்கொண்டு வந்தோம். எல்லிஸ் பேட்டை என்ற இடத்தில் நிலை தடுமாறி விழுந்து உயிருக்கு போராடியதை நேரில் கண்டோம். நண்பர்களே வேகம் விவேகம் அல்ல என புரிந்து கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். ராகுல் ஒருவேளை வேகமாக செல்லாமல் இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.