காசாவில் இன்று முதல் அமலுக்கு வருகிறது போர் நிறுத்தம்.. புதிய நம்பிக்கையில் மக்கள்!
காசாவில் இன்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளதாக, போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்த கத்தார் அறிவித்துள்ளது. கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இதுதொடர்பான தகவலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், காசாவில் சுமார் ஒன்றரை வருடங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த புதன்கிழமை ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், கத்தார் மற்றும் அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டது. ஆனால், சில சிக்கல்கள் இருப்பதாக நெதன்யாகு ஹமாஸ் மீது குற்றம்சாட்டிய நிலையில், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. இதனை அடுத்து இஸ்ரேல் சனிக்கிழமை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பயன் தராவிட்டால், மீண்டும் போரில் ஈடுபடுவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு, ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், ஹமாஸால் முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ள 33 பிணைக்கைதிகளின் பட்டியல் அளிக்கப்படாவிட்டால், போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என எச்சரித்திருந்தார். முதற்கட்டமாக, ஹமாஸ் மூன்று பெண் பணயக்கைதிகளையும், இஸ்ரேல் 95 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவில் போர்நிறுத்தம் அம்மக்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஏனெனில், அப்ப்குதியில் இருந்து 90% மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவின் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாகவே காட்சி அளிக்கிறது. 460 நாட்களுக்கும் மேலாக நடந்த போரில் 46 ஆயிரத்து 788 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.