எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் pt web
தமிழ்நாடு

இபிஎஸ்-க்கு நெருக்கடி தரும் நிர்வாகிகள்.. பலத்தை கூட்டுகிறாரா ஓபிஎஸ்? அதிமுகவில் நடப்பது என்ன?

அதிமுக ஒன்றிணையவேண்டும் என அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி வருவது கட்சி வட்டாரத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்..,

இரா.செந்தில் கரிகாலன்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்த கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தது. தொடர்ந்து, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பு ஒன்றிணைந்தபோதும், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, டிடிவி தினகரன் தனிக் கட்சியைத் தொடங்கினார். தவிர, சிறையிலிருந்த சசிகலாவும் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டார். இரட்டைத் தலைமைகளாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு ஒற்றைத்தலைமை விவகாரத்தால், ஓபிஎஸ்க்கும் இபிஎஸ்க்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. கட்சியிலிருந்து விலக்கப்பட்டார் ஓ.பி.எஸ்.

தொடர்ந்து, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’ என தனி அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில், கட்சி இப்படி பல அணிகளாக இருப்பதுதான் அதிமுகவின் தொடர் தோல்விகளுக்குக் காரணம்; அதனால் இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரையும் ஒன்றிணைக்க, அதிமுக ஒருங்கிணைப்புக்குழு என்கிற அமைப்பை, கே.சி.பழனிசாமி, பெங்களூர் புகழேந்தி, ஜேசிடி பிரபாகர் மூவரும் இணைந்து உருவாக்கினர். அதேவேளை, மீண்டும் ஒன்றிணைய சாத்தியமே இல்லை என மறுத்து வருகிறார், எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு வெளியிட்ட அறிக்கையிலும்கூட, “ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது” என்று மிகக் காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதற்குக் கடுமையான எதிர்வினைகளும் வந்தன. இந்நிலையில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறும் நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருவது பேசுபொருளாகி வருகிறது.

சமீபத்தில் அ.தி.மு.க. தேனி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சிமணி கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, அதற்கான கடிதத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பினார். ஏற்கெனவே, “அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு இன்றி செயல்படுவதால் தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, அ.ம.மு.க. பொது செயலாளர் தினகரன் போன்றோரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து செயல்பட பொது செயலாளர் பழனிசாமி முன்வர வேண்டும். அப்படி அ.தி.மு.க., ஒருங்கிணைந்தால் மட்டுமே வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற முடியும்” எனக் கடிதம் அனுப்பியிருந்தார். என்றாலும் கூட, ‘அந்தக் கோரிக்கை நிறைவேறாததால் பதவி விலகுகிறேன்’ எனக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

இதுஒருபுறமிருக்க, அதிமுக ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி இடையூறாக இருப்பதாகக் கூறி அதிமுக திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் கட்சியிலிருந்து விலகி ஓபிஎஸ் முன்னிலையில் அவரது ஆதரவாளராக இணைந்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மோகன், “அதிமுக ஒன்றினைய வேண்டும். இதற்காக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தன்னைப் போன்று பல அதிமுக நிர்வாகிகள் இதே முடிவில் இருக்கின்றனர். ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுக 2026 ல் ஆட்சியைப் பிடிக்கும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், ஓபிஎஸ் அணியில் இணைந்த வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல, குறிஞ்சிமணி விலகல் குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “ஏற்கனவே ராமநாதபுரம் தேர்தலில் மாற்று முகாமில் பணி செய்தததால் அவர் மீது ஒழுகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக இதெல்லாம் கடந்து போகும்” என பதிலளித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

இன்று மாலை தேனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ள நிலையில் அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது பேசுபொருளாகியிருக்கிறது.