”நான் பாலியல் தொழிலாளியா.. என் கண்ணீர் உன்னை சும்மா விடாது” - சீமான் பேச்சுக்கு நடிகை கண்ணீர் வீடியோ
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது, சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ?என்று திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பது தொடர்பாகவும் அவர் மீதான பாலியல் வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “என்னைப் பாலியல் குற்றவாளி என சொல்லுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் என்ன நீதிபதியா? என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா? அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா? என் தாய் என் சகோதரிகள் எல்லாம் இல்லையா? என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா?
நான் கேட்டதில் உங்களுக்குக் கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்குப் பெயர் என்ன? என்னைப் பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு நீங்கள் யார்?
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது என்ன எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ச்சியாக அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.
‘என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி’ என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறாகும்?இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது. சீமான் இனி நன்றாக இருக்க மாட்டார் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.