செய்தியாளர் ராஜ்குமார்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக திரு.வி.க நகர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, “திமுக ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமீபத்திய நிகழ்வில் ஒருவர் மன்னராட்சி நடக்கிறது என பேசுகிறார் ஒருவர் (ஆதவ் அர்ஜுனா பற்றி). டாக்டர் அம்பேத்கர் விழாவில் அவரை பற்றி பேசி இருக்கலாம்.
ஆனால் Political science படித்துவிட்டு எது பேச வேண்டும் என தெரியாமல், வாரிசு அரசியல் என பேச என்ன தகுதி இருக்கிறது? லாட்டரி சீட்டு நடத்தியவரின் வாரிசாக இருந்துகொண்டு, லாட்டரி சீட்டு வியாபாரம் செய்துகொண்டு கழகத்தைப் பார்த்து, உதயாவைப் பார்த்து வாரிசு அரசியல் என சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
திருமாவளவன் சட்டக் கல்லூரி படிக்கும்போதே அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை உள் வாங்கியவர். விசிக-வில் திருமா, ரவிக்குமார், சிந்தனை செல்வன், வன்னியரசு போன்றவர்கள் கொள்கை பிடிப்பு உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் அந்த கட்சியில் (ஆதவ்) இருந்துகொண்டு இதுபோல் பேசுகிறார்.
சமத்துவம், சகோதரத்துவம் வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தினார். மாநிலங்களின் ஒருங்கிணைப்பு (Union of states) போன்றவற்றை அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால் இதை பற்றி எல்லாம் ஆதவ் அர்ஜூனா பேசவில்லை. மன்னராட்சி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது.
அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியவர்கள் அம்பேத்கர் பற்றி பேசாமல் அரசியலை பற்றி தான் பேசினார்கள். திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தல் பரப்புரை என்றால் உதயநிதிதான். ஒரு செங்கல் வைத்து தேர்தல் வியூகம் செய்தவர். படிக்கும் காலத்தில் இருந்ததே கொள்கை உணர்வுடன் இருந்ததால்தான் சனாதனம் குறித்து வலிமையாக பேசினார். திரைப்படத்தின் மூலமாகவும் கொள்கையை சொன்னவர் உதயநிதி. உங்க (விஜய்) படத்தில் அப்படி ஏதாச்சும் இருக்கா? கொள்கை ரீதியா ஒன்றாவது இருக்கா? ஒன்னும் இல்ல!
வந்த உடனே ஆட்சியை பிடிப்போம் என இன்று பேசுகிறார்கள். அது எப்படி சாத்தியம் ஆகும்? 200 அல்ல... 237 தொகுதிகளிலும் நாம் வெல்வோம். விளையாட்டு துறையை திறம்பட வழி நடத்தி வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி. அதனால்தான் பல செஸ் வீரர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.
திமுக உடன் இருப்பது கொள்கை கூட்டணி என திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்பட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். வைக்கம் போராட்டம் நடத்திய பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பதை சாதித்து இருக்கிறது திமுக அரசு.
பெஞ்சல் புயல் பாதிப்பு மக்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை வழிநடத்தும் முதல்வராக உதயநிதி எதிர்காலத்தில் வருவார்” என பேசினார்.