ஆதவ் இடைநீக்க அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில்.. முதல்வரை சந்திக்க சென்ற விசிக தலைவர் திருமாவளவன்!
சமீபத்தில் விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் திமுகவுக்கு எதிராக விசிக துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் ஆர்ஜூனா பேசியிருந்தார். இது விசிக - திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது ஒரு நிகழ்வு மட்டுமன்றி சமீபகாலமாகவே ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்தது. தொடர்ந்து திமுக உடனான கூட்டணியிலும் விசிகவுக்கு சிக்கல் எழுந்தது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆதவ், விசிக-வில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அறிவிப்பு வெளியானது. அது வெளியான சில நிமிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தலைமை செயலகத்துக்கு சென்றுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்ந்துவரும் நிலையில், முதல்வரை சந்திக்க தலைமை செயலகத்துக்கே சென்றுள்ளார் திருமாவளவன்.
இந்த சந்திப்பு, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதற்கான சந்திப்பு என்று விசிக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக ஆதவ் அர்ஜுனாவால் திமுக - விசிக இடையே ஏற்பட்ட சலசலப்புகளால், இது அரசியல் சந்திப்பாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது திருமாவளவன், தலைமைச் செயலகத்தில் முதல்வருக்காக காத்திருக்கிறார்.