“குற்றச்சாட்டெல்லாம் சொல்லக்கூடாது இந்த நேரத்துல” - வேல்முருகனுக்கு சபாநாயகர் அறிவுரை!
“என் தொகுதிக்கு இதுவரையில் தங்கள் துறையிலிருந்து ஒரு சிறு அளவு கூட எந்த நற்பணிகளும் நடைபெறவில்லை” என்று தவாக வேல்முருகன் தெரிவித்த நிலையில், அதற்கு உடனடியாக காட்டமாக பதிலளித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது.
இதில் பேசிய தவாக வேல்முருகன், “தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மழை போன்ற இயற்கை பேரிடரின் போது என்னுடைய பன்ருட்டி தொகுதியில் பகண்டை, பெரிய பகண்டை, சின்ன பகண்டை, குமாரமங்கலம், தொரப்பாடி, பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் பகுதிகளை ஒட்டிய நூற்றுக்கணக்கான கிராமங்கள் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் மிகப்பெரிய துயரத்தை சந்திக்கிறார்கள்.
இதுதொடர்பாக, அமைச்சர் அவர்களை நான்காண்டு காலத்தில் முதல் முறையாக சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தேன். ஒரு தடுப்பணையும் வெள்ளம் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு அரண்களையும் சுவர்களையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
தாங்களும் அதற்கான முயற்சிகளை எடுத்து துறையின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினீர்கள். ஆனால், என் தொகுதிக்கு இதுவரையில் தங்கள் துறையிலிருந்து ஒரு சிறு அளவு கூட எந்த நற்பணிகளும் நடைபெறவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு சட்டென பதில் கொடுத்த சபாநாயகர், “ஒரு சிறு உதவி என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது” என்றார். உடனடியாக வேல்முருகன், “செய்யவில்லை என்றால் அப்படித்தானே சொல்லமுடியும்” என்றார்.
இருப்பினும் சபாநாயகர், “எதை செய்யவில்லை என்று குறிப்பிட்டு கூறவேண்டுமே தவிர பொதுவாக சொல்லிவிட்டு சென்றுவிடக் கூடாது. ஆகவே அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவோம்” என்றார். இதை தொடர்ந்து பேசிய வேல்முருகன்.. ”அமைச்சர் அவர்களில் சிறப்பு நிதி ஒதுக்கி, இந்தக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் உடனடியாக எங்கள் தொகுத்திக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பின் பேசிய சபாநாயகர், “நீங்களெல்லாம் மூத்த உறுப்பினர். குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. இந்த நேரத்தில் எது தேவையோ அதைதான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எம்.எல்.ஏ-விற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், “உடனடியாக நிதி ஒதுக்குவது வழிமுறையல்ல. அடுத்த நிதியாண்டில், நிதி ஆதாரத்தை பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது” என்றார்.
இதன்பின்னர் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இயற்றப்பட்ட தனித்தீர்மானத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தார் வேல்முருகன். அவர் அப்போது பேசியவற்றதன் முழு விவரத்தை, கீழ் இணைக்கப்படும் வீடியோவில் காணலாம்...