கரூர் துயர சம்பவம் மொத்தமாக 41 உயிர்களை பலிகொண்டிருக்கிறது. நடந்தது ஒரு துயரச் சம்பவம்.. அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர அக்குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய நிவாரண உதவிகள் என்ன? இனி, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? ரசிகர் மனநிலையில் இருக்கும் மாணவர்களை எப்படி மீட்டுக்கொண்டு வருவது போன்ற விவாதங்கள்தான் முறையாக நடந்திருக்க வேண்டும். ஆனால், கரூர் துயரம் வேறொரு பரிமாணத்தை எட்டி நிற்கிறது. காவல்துறை ஒத்துழைப்பு தரவில்லை என்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், “பழிவாங்கும் நடவடிக்கையா” என்று முதலமைச்சரிடம் கேட்கிறார் தவெக தலைவர் விஜய். முழுக்க முழுக்க விஜய் மேல் தவறு என்கிறது வேறொரு தரப்பு.. ஆளும் அரசுமேல்தான் தவறு என்கிறது மற்றொரு தரப்பு.. எங்கு தவறு? யார் மேல் தவறு?
அரசியல் கட்சிகள் கரூர் துயரத்தை கையாண்ட விதத்தை இரு விதமாக பிரித்துவிடலாம். விசாரணை எதுவும் தொடங்குவதற்கு முன்பே விஜய்க்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்த கட்சியினர். இச்சம்பவத்தை ஒரு விபத்தாக மட்டுமே எண்ணி கையாண்ட கட்சிகள். இரு தரப்பிலும் அவர்களுக்குத் தேவையான அரசியல் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த சம்பவம் தொடர்பாக புதிய தலைமுறை நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அரசியல் கணக்கு இருக்கிறது. 41 பேர் அங்கு துள்ளத்துடிக்க உயிரிழந்திருக்கிறார்கள். அந்தப் புள்ளியில் இருந்து அரசியல் களத்தை நோக்கி அரசியல்வாதிகள் நகர்த்திவிட்டார்கள். உண்மையில் மக்கள் சார்பு அரசியலில் இருந்து இது நகர்ந்துவிட்டது.
முதலில் குறிப்பிட வேண்டியது முதல் தகவல் அறிக்கையைத்தான். தாமதமாக விஜய் வந்தார் என அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தாமதமாக வரும்போதே அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்குப் பின்னால் வேறொரு விஷயம் இருக்கிறது. விஜய் மீது கைது நடவடிக்கை எடுத்தாலோ அல்லது வழக்குப்பதிவு செய்தாலோ மக்கள் மத்தியில் அவரை இன்னும் மாஸாக காட்டிவிடுமோ என்று அரசு அச்சப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த கரூர் சம்பவத்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கையாளும் விதம்.. அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கையாளும் விதம்.. முக்கியமாக தவெக கையாளும் விதம்.. அனைத்து தரப்புக்கு இடையிலும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.. ஓராயிரம் அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கரூர் விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தமிழக அரசிடமிருந்து தன்னுடைய உள்துறை அமைச்சகம் மூலமாக அறிக்கை கேட்கச் சொன்னார் அமித் ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவெக அணுகும் முன்னரே இது நடந்தது. தொடர்ந்து, ஆளுநரும் தமிழக அரசிடமிருந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விவரங்களை கேட்டார். முன்னதாக கரூர் விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சரி; இன்றைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி; தமிழக அரசையே கடுமையாகச் சாடினர்..
இதனூடாகவே, தேசிய மனிதவுரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்; சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் தவெக முன்னணி தலைவர்களில் ஒருவரும் பாஜகவில் முன்பு இருந்தவருமான நிர்மல் குமார். இதற்கிடையே தவெக தலைவர் விஜய், ஆடிட்டர் குருமூர்த்தியைச் சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தை குற்றச்சாட்டாகவே முன்வைத்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். “முதலமைச்சர் மீது பழி சுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் வீடியோ உறுதிப்படுத்துகிறது. திமுகவுக்கு எதிரான வெறுப்பு அரசியலின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார். தவெக தலைவர் விஜய் பாஜகவின் கருவிதான் என்பது உறுதியாகிறது” என தெரிவித்திருக்கிறார்.
அதிமுக முழுக்க முழுக்க இதை திமுக அரசின் நிர்வாக தோல்வி என்றே சித்தரிக்கிறது. ’அரசியல் செய்யாதீர்’, ’அரசியல் செய்யாதீர்’ என்று எல்லா அரசியலையும் செய்து கொண்டிருப்பது யார்? திமுகதானே?” என விமர்சிக்கிறது. செந்தில்பாலாஜி இந்த சம்பவத்தில் பதறுவது ஏன் என்றும் விசாரணை ஆணையம் அமைத்த பிறகு ஏன் தொடர்ச்சியாக ஆளும் தரப்பு செய்தியாளர்களை சந்தித்துக்கொண்டு இருப்பது ஏன் என்றும் கேள்விகளை முன்வைக்கிறது.
இந்த விவகாரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவின் நிலைப்பாடு தொடர்பாக தெரிந்துகொள்ள பத்திரிகையாளர் டி.என்.ரகுவைத் தொடர்பு கொண்டோம். “விஜய் மீது அதிமுகவும் பாஜகவும் பரிவு காட்டுவதற்கு முக்கியக் காரணம், தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று அவர்கள் நினைப்பதுதான். ஏனென்றால், அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை மிக லாவகமாக கையாள அதிமுக பாஜக கூட்டணி நினைக்கிறது. ஆனால், விஜய் இதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் முக்கியமானது.
இந்த விவகாரத்தில் விஜயை தீவிரமாகப் பாதுகாப்பது அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும்தான். அவர் பொறுப்போடு நடந்திருக்க வேண்டுமென்றோ, அவரது தொண்டர்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டுமென்றோ அவர்கள் தெரிவிக்கவில்லை. இதில், எல்லோருக்கும் பொறுப்பு இருக்கும்போது அரசை மட்டும் நீங்கள் எப்படி குற்றம்சுமத்துவீர்கள். இது கூட்டணிக் கணக்குதான். எல்லோரும் 2026 தேர்தலை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். வேறு எதையும் அவர்கள் யோசிப்பதுபோல் தெரியவில்லை. இதில் 100% அரசியல்தான்.. மக்கள் தொடர்பான சிந்தனையே இல்லை. இந்த விவகாரங்களை விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும்” என்றார்.
திமுக இந்தச் சம்பவத்தையும் தவெக தரப்பையும் கையாள்வதிலும் சில கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது. இந்த கேள்விகள் தொடர்பாகப் பேசுவதற்காக பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “தவெகவைப் பொறுத்தவரை இளைஞர்களின் பெருங்கூட்டம் அவர்களுக்குப் பின்னால் இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் இருக்கிறது. அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், பலருக்கும் பிடித்தமான நடிகராக விஜய் இருக்கிறார். எனவே, விஜய் மீது நடவடிக்கை எடுத்தாலோ அல்லது அவரைக் கைது செய்தாலோ நேரடியாக களத்தில் அது பிரதிபலிக்கும் என திமுக அரசு பயப்படுகிறது. மற்ற கட்சியினர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அது பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சியினர் மத்தியில்தான் அந்த உரையாடல் நடக்கும். ஆனால், விஜய் அப்படியல்ல.
இதற்கு இரு விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்து தேர்தலைச் சந்தித்தபின், திமுகவால் ஆட்சிக்கட்டிலை நெருங்கமுடியவில்லை. அதனால், விஜய்க்கும் அதைப் பொருத்திப் பார்க்கிறார்கள். ஆனால், அந்த அச்சம் தேவையற்ற ஒன்று. தவறுகள் நடக்கும்பட்சத்தில் அரசு அதை துணிச்சலாகக் கையாள வேண்டும். அந்த இடத்தில் திமுகவிடம் ஒரு தேக்கம் இருக்கிறது. ஒருவேளை விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது சட்டம் ஒழுங்கிலும் எதிரொலிக்கும்” எனத் தெரிவித்தார்.
தவெக இந்த விவகாரத்தை கையாளும் விதம் குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய லட்சுமி சுப்பிரமணியன், “இந்த சம்பவம் குறித்து விஜய் பேசுவதற்கு கிட்டத்தட்ட 60 மணி நேரம் ஆகியிருக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவர்கூட விஜய்க்கு எதிராகப் பேசவில்லை. விஜய் தன் மீது இருக்கும் எல்லா தவறுகளையும் மறைத்துவிட்டு அனைத்திற்கும் திமுகவும் அரசும்தான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே விஜயின் கட்சியைச் சேர்ந்தவர்களும், விஜயும் காவல்துறையும் அரசும் தங்களுக்கு எதிராக இருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நடிகராகவோ அல்லது கட்சித் தலைவராகவோ பொறுப்பு வேண்டாம். மனிதனாக சமூகப்பொறுப்பாவது வேண்டாமா? இவர், எப்படி தலைவராக இருப்பார்” எனத் தெரிவித்தார்.
விஜய் மீதான திமுகவின் தயக்கத்தை விஜய் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாரா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. இதுதொடர்பாகப் பேசிய சுவாமிநாதன், “100% விஜய் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். இது தவறான அரசியல் என்பதைத்தாண்டி மிக ஆபத்தான அரசியல். தலைவர் என்பவர் தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தான் தாமதமாக வந்தது ஏன் என விஜய் விளக்கவில்லை. கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது எனப் பேசுகிறார். விஜய் ஒரு அஜெண்டாவுடன் செயல்படுகிறார். தன் ரசிகர்கள் மரணத்தையும் தாண்டி திமுக எதிர் தவெக என நிலைநிறுத்துவதில்தான் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது அபாயகரமான அரசியல். உயிரிழந்தவர்களின் மீது செய்யப்படும் அரசியல் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாத அரசியல்” என்றார்.
கரூர் துயரம் நடந்து சில மணி நேரங்களுக்குள் இது அரசியல் சண்டையாக மாறிவிட்டது. ஒவ்வொரு தரப்பும் தங்களுக்குத் தேவையான அரசியலுக்காக இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. விஜய் மேல் நடவடிக்கை எடுத்து அவரை மக்கள் மத்தியில் வலுவாக்க வேண்டாம் என நினைக்கும் திமுக; எத்தனை விமர்சனம் செய்தாவது தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர நினைக்கும் அதிமுக- பாஜக கூட்டணி; திமுக எதிர் தவெக என நிலை நிறுத்த முயற்சிக்கும் விஜய்.. இறந்தவர்களின் ஆத்மா பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டு அரசியலை.