கரூர் கூட்ட நெரிசல் | அரசு செய்தது என்ன? ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்த அதிகாரிகள்
பேருந்துக்குகரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக சுமத்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, தமிழக அரசு ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளது. பரப்புரைக்கு தவெக கேட்ட இடத்தை வழங்காமல் வேறு இடத்தை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், இதுதொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
அப்போது பேசிய அமுயா ஐஏஎஸ், "கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சில சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. எனவே, நிர்வாக ரீதியாக என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதற்காகத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "விஜய் உரையாற்றியபோது மின்தடை ஏற்படவில்லை; கூட்டம் நடக்கும்போது மின்சாரத்தை நிறுத்துமாறு தவெகவினர் கேட்டுக்கொண்டனர். தொண்டர்கள் ஜெனரேட்டர் அறையில் புகுந்ததால்தான் மின்தடை ஏற்பட்டது.
விஜய் வாகனம், ஆம்புலன்ஸ் செல்லவே போலீஸார் தொண்டர்களை விலக்கிவிட்டனர்; தடியடி நடக்கவில்லை. தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால்தான் வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது. 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமானது; இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு" எனத் தெரிவித்தார். குறிப்பாக சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விகளை முன்வைத்து பதிலளித்துப் பேசினார். கேள்வி பதில்களாக கீழே..
”பரப்புரை கூட்டதின்போது எதற்கு ஆம்புலன்ஸ் வந்தது”
ஆம்புலன்ஸைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறது, கரூரில் மொத்தம் 19 ஆம்புலன்ஸ்கள் இருக்கின்றன. பரப்புரை நடந்த இடத்தை சுற்றி மூன்று இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆம்புலன்ஸ் தொடர்பாக முதல் போன் வந்தது 7.14 நிமிடத்திற்கு. 7.20க்கு அங்கு ஆம்புலன்ஸ் சென்றது. இரண்டாவது போன் 7.15க்கு வந்த நிலையில், 7.23க்கு ஆம்புலன்ஸ் சென்றது. தவெக சார்பில் 7 ஆம்புலன்ஸ்கள்.. தமிழ்நாடு அரசின் சார்பில் 6 108 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலில் அதிகமானோர் பாதிகப்படுகிறார்கள் எனத் தெரிய ஆரம்பித்ததும் வெளியிலிருந்து ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டன.
பரப்புரை தொடங்குவதற்கு முன்பே நெரிசல் நடந்ததா?
12 மணிக்கு அவர் பரப்புரை நடக்கும் இடத்திற்கு வரவேண்டும். கூட்டம் மதியத்தில் இருந்தே அப்பகுதியில் அதிகளவில் கூட ஆரம்பித்துவிட்டனர். 3 மணியில் இருந்து கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் இருந்து காத்திருப்பவர்களும் அப்பகுதியில் இருக்கிறார்கள். அவர் வரும்போது அவருடன் வந்தவர்களும் இருக்கிறார்கள். அதோடு அவரது வாகனம் பெரிய வாகனம். அவரது வாகனம் முன் செல்லச் செல்ல கூட்டத்தினர் இட வல புறங்களில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். பேருந்துக்கு பின்னால் இருந்தவர்களும் அவர் பேசுவதைக் கேட்க முன் வருகின்றனர்.. அப்போதுதான் நெரிசல் ஆகிறது.
பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது
பரப்புரையின்போது மின்சார தடை ஏற்பட்டதா என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக முன்பே அரசு அதிகாரிகள் விளக்கமளித்து இருக்கிறார்கள்.
காவலர்கள் தடியடி நடத்தினார்களா? என்று கேட்கிறார்கள். ஏற்கனவே பரப்புரை நடக்கும் இடத்தில் அதிகமான கூட்டம் இருக்கிறது. கட்சியின் தலைவர் அப்பகுதிக்கு வரும்போது அவருடன் வந்த கூட்டமும் அப்பகுதியில் இணைகிறது. அப்போது டிஎஸ்பி, வாகனத்தை குறிப்பிட்ட இடத்திற்கு முன்பே நிறுத்தச்சொல்லியிருக்கிறார். ஆனால், அக்கட்சியினர் கேட்கவில்லை. அப்போது அங்கிருக்கும் கூட்டத்தை காவல்துறையினர் முன்னாள் நகரச் சொல்கிறார்கள்.
வேலுசாமிபுரம் என்ற குறுகலான பகுதியை வேண்டுமென்றே காவல்துறை ஒதுக்கியதா?
சில ஊடகங்களில் அது குறுகிய சந்து என்று வெளியிட்ட கருத்துக்கள் சரியா? பரந்த இடங்கள் இருந்தும் மக்கள் நெரிசலை ஏற்படுத்தக்கூடிய இடம் வழங்கப்பட்டதா? எனும் கேள்விக்கு அமுதா ஐஏஎஸ் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “முதலில் தவெக தரப்பினர் 7 இடங்களை தேர்ந்தெடுத்து அனுமதி வேண்டி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். காவல்துறையினரும் தவெக தரப்பினரும் கலந்தாலோசித்து 25 ஆம் தேதி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அதே தேதியில் எதிர்கட்சியினர் ஒரு பரப்புரைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த இடத்தில் எந்த சிரமும் இல்லாமல் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கஷ்டப்படாமல் கூடியிருக்கிறார்கள். 26 ஆம் தேதி தவெக தரப்பினர் பரப்புரைக்கு வேலுச்சாமிபுரம் வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்கள். முதலில் ரவுண்டனா பகுதியைக் கேட்டிருக்கிறார்கள். அங்கு பெட்ரோல் பல்க் மற்றும் அமராவதி பாலம் இருந்தது. எனவே கூட்ட நெரிசல் ஆனது என்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் காவல்துறை தரப்பில் இருந்து அந்த இடம் ஒதுக்கப்படவில்லை. அடுத்தது உழவர் சந்தை. 30 அடிமுதல் 40 அடி சாலை கொண்டது. தற்போது கொடுக்கப்பட்ட சாலை ஏறத்தாழ 60 அடி அகலம் கொண்டது. எனவேதான் வேலுச்சாமிபுரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
”20 பேருக்கு 1 காவலர்”
அதிகளவில் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். இதை முன்கூட்டியே கணிக்கமுடியவில்லையா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்கள் கொடுத்த கடிதத்தில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரை வருவார்கள் எனக் கணித்து செயல்பட்டிருக்கிறார்கள். 50 பேருக்கு ஒரு காவலர் என்பதுதான் சாதாரண நடைமுறை.. ஆனால், இந்த சம்பவத்தில் 20 பேருக்கு ஒரு காவலர் என்று பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்” என , இதுதொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.