கரூர் துயரம்| அருகிலேயே தனியார் மருத்துவனை.. பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லையா? #FactCheck
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சமூகவலைதளங்களில் பல்வேறு விசயங்கள் பேசப்பட்டுவருகின்றன. அதில் கூட்டநெரிசல் ஏற்பட்ட அருகிலேயே தனியார் மருத்துவமனை ஒன்று இருக்கும்போது, ஏன் அங்கு நெரிசலில் சிக்கியவர்கள் சேர்க்கப்படவில்லை, ஏன் ஆம்புலன்ஸில் வேறு இடங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர் என வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அதுகுறித்த உண்மை நிலை என்ன என்பதை பகிர்ந்துள்ளது.
உண்மை என்ன? #FactCheck
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று பரவும் தகவல் வதந்தி என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு 6 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் பற்றாக்குறையால் அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.