Annamalai pt web
தமிழ்நாடு

“பிற்போக்குச் சிந்தனை.. மீடியா ஸ்டண்ட்? ” | பிரச்னையை விட்டுவிட்டு கவனம் ஈர்க்க பார்க்கும் அண்ணாமலை?

தொண்டர்கள் புடைசூழ, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி உள்ளார்.

அங்கேஷ்வர்

சாட்டையடி போராட்டம்

தொண்டர்கள் புடைசூழ, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி உள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசுக்கு எதிராகவும் இந்த போராட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார். சாட்டையடி கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, உடலை வருத்தி, முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்தால் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Annamalai

திமுக அரசை கண்டித்து அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார் என்பதைத்தாண்டி, அண்ணாமலை தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. உண்மையான பிரச்னை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது, மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்வது, ஆளும் தரப்புக்கு அழுத்தம் கொடுப்பது. ஆனால், அதை விடுத்து சாட்டையால் அடித்துக் கொள்கிறேன், செருப்பு அணியமாட்டேன், விரதம் இருக்கப்போகிறேன் என பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தவறான முன்னுதாரணம்

அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரனைத் தொடர்பு கொண்டு அண்ணாமலை போராட்டம் குறித்து கேட்டோம். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டு அரசியலில் தன்மீது கவனம் விழவில்லை; வெற்றி வரவில்லை என்பதால் இரக்கத்தைத் தூண்டும் வகையிலான மீடியா ஸ்டண்ட்டைத்தான் அவர் செய்கிறார். ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றுதான் இதைச் செய்கிறார். இது சரியான அரசியல் அணுகுமுறை இல்லை.

பத்திரிக்கையாளர் ராஜ கம்பீரன்

ஐபிஎஸ் படித்தவர், இளைஞர், நவீன உலகத்தின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் ஒருவர் தவறான வழிகாட்டுதலைச் செய்கிறார். மக்கள் மன்றத்தில் ஒரு பிரச்னையைப் பற்றி பேசுவதைத்தான் ஜனநாயகப்பூர்வமாக பார்க்க முடியும்.

நான் கோவிலுக்குப் போகிறேன், 48 நாள் செருப்பு அணியமாட்டேன், விரதம் இருக்கிறேன், சாட்டையால் அடித்துக் கொள்கிறேன் என்பது என்பதெல்லாம் பிற்போக்குச் சிந்தனை மட்டுமல்ல, அதற்குள் வழிபாட்டையும் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டுச் சூழலில் மதவாத அரசியல் எடுபடவில்லை என்ற தோல்வியின் வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்க முடியும். ஆரோக்கியமான அரசியலாக இதைப் பார்க்க முடியாது. இது தவறான முன்னுதாரணமும் கூட.

தீவிரத்தை திசைதிருப்பும் செயல்

மணிப்பூரில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோது, அப்போதெல்லாம் ஏன் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளவில்லை. சிறுமி ஆசிஃபா, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டபோதெல்லாம் நீங்கள் ஏன் சாட்டையால் அடித்துகொள்ளவில்லை. பாஜகவினர் பாலியல் அத்துமீறலில், வன்புணர்வு சார்ந்த குற்றங்களில் ஈடுபடும்போதெல்லாம் வராத கோபம் எப்படி திமுக மேல் வருகிறது., உங்களை அறம் சார்ந்த மனிதனாக மக்கள் எப்படி நம்புவார்கள்.

Annamalai Saattai

அண்ணாமலையின் செயல்பாடு அந்தப் பிரச்னையின் தீவிரத்தை திசைதிருப்பும் ஒன்றாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. ஒரு பிரச்னை நிகழும் போது அதற்கு நீதி கிடைப்பதற்கான கவனத்தைச் செலுத்த வேண்டுமே தவிர, தான் ஊடக கவனம் பெறுவதற்காக இதுபோன்ற சம்பவங்களைப் பயன்படுத்திக்கொள்வது சரியான முன்னுதாரணமாக இருக்க முடியாது. நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர் துணை நிற்கலாம். அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்திலோ அல்லது வழக்கு சார்ந்தோ எதேனும் உதவிகளைச் செய்யலாம். இதுதான் எல்லோரும் செய்வது. தன்மீது ஊடக வெளிச்சம் படவேண்டும் என்பதற்காக சாட்டையை எடுத்து அடித்துக் கொள்வது திசை திருப்பும் நடவடிக்கை” என்றார்.

தான் ஒரு அரசியல்வாதி என நிரூபிக்கிறார்

அண்ணாமலையின் இந்த போராட்டம் குறித்து மக்களது பார்வை எப்படி இருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, “மக்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள் என்பதை விட, இதுவரை கட்சி ரீதியாக எதிர்க்கட்சிகள் போராடும்போது, அதிகபட்சமாக உண்ணாவிரதம், சாலை மறியல் , ரயில் மறியல் என ஈடுபடுவார்கள். இவர் கொஞ்சம் வித்தியாசமாக முருகனை வேண்டிக்கொண்டு சாட்டையடி, தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் எனச் செய்வதன் மூலமாக, சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை கண்டிப்பதாக சொல்ல முயல்கிறார். இதை அரசியல் ஸ்டண்ட் என சிலர் விமர்சிக்கவும் செய்கிறார்கள். எந்த ஒரு விஷயத்திலும் தன்னை முன்னிருத்திக்கொண்டு தான் அதில் பிரதானமாக இருக்க வேண்டும் என அண்ணாமலை நினைப்பதை மட்டும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

மூத்த பத்திரிகையாளர் பிரியன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திலேயே, அரசாங்கம் எங்கு தவறு செய்தது? வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது எப்படி? என்பது குறித்தெல்லாம் தொடர்ந்து பேசி ஜனநாயக ரீதியாக போராடியிருந்தால் அதில் ஒரு நியாயம் உண்டு. என்னை நானே சவுக்கால் அடித்துக்கொள்கிறேன் என்று தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்வதன் மூலம் தான் ஒரு அரசியல்வாதிதான் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.