காவல் ஆணையர் Vs அமைச்சர் கோவி. செழியன் | அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் 3 முக்கிய முரண்பாடுகள்!
சென்னை காவல் ஆணையர் Vs அமைச்சர் கோவி. செழியன்.. இருவரும் தெரிவித்த 3 முரண்பட்ட தகவல்கள்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் முரண்பட்ட தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். அதில் முக்கிய 3 முரண்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்..
முரண்பாடு - 1
மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக posh கமிட்டி புகார் அளித்ததாக காவல் ஆணையர் அருண் கூறியிருந்தார். ஆனால், மாணவி பாதிக்கப்பட்டது பற்றி posh கமிட்டிக்கு தகவலே தெரியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியிருக்கிறார்.
முரண்பாடு - 2
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறாரா? இல்லையா என்பதிலும் காவல் ஆணையரும், அமைச்சரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர்.
ஞானசேகரனின் மனைவி அண்ணா பல்கலையில் வேலை செய்கிறாரா? என்ற கேள்விக்கு "அது போன்ற தகவல் எதுவும் இல்லை" என்று காவல் ஆணையர் பதில் அளித்தார்
ஞானசேகரன் மனைவி அண்ணாப் பல்கலைக் கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்கிறார். மனைவியை பார்க்க அவ்வப்போது வருவார் என கூறுகிறார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
முரண்பாடு - 3
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்தும் சென்னை பெருநகர காவல் ஆணையரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.
"அண்ணா பல்கலை. வளாகத்தில் 70 சிசிடிவி உள்ளது. 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கின்றன. 140 காவலர்கள் 3 பிரிவாக பணியில் இருக்கிறார்கள்" என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்து இருந்தார்.
“நுழைவாயில், விடுதி, உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தவறு நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லைதான். 10% கேமராக்கள் செயல்படாமல் இருந்திருக்கலாம்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.
அண்ணாமலை கேள்வி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் சந்தேகங்களை எழுப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது.
உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது” என்று தெரிவித்து இருக்கிறார்.