புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்டது வேங்கைவயல் கிராமம். இங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டியே உலுக்கியது. குற்றம் செய்தவர்களை உடனடியாக கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த நிலையில் வழக்கின் விசாரனை கடந்த 2 ஆண்டுகளாக நடந்துவந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அதில், வேங்கைவயல் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, வேங்கைவயல் காவலர் முரளிராஜின் தகப்பனார் ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக வாதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பலி வாங்குவதற்காக, முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது புலனாவதாக தெரிவிக்கப்பட்டது.
முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, சாட்சியங்களின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் ஆகியற்றை பகுப்பாய்வு செய்தபின்னர் விசாரணை முடிக்கப்பட்டு, முரளிராஜா, சுதர்ஷன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக, சிபிசிஐடி தனது விளக்கத்தில் கூறியுள்ளது. குற்றப் பத்திரிக்கைக்கு எதிராக வேங்கைவயல் கிராம மக்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழலும் நிலவி வருகிறது.
இதனை அடுத்து பட்டியலின இளைஞர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மூன்று பக்க அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். வேங்கை வயல் விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.” எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேச சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிரைத் தொடர்புகொண்டோம். அவர் கூறியதாவது, “தவறான தகவல்களை யாரும் பரப்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. சிபிசிஐடி கொடுத்த அறிக்கையின் உண்மைத்தன்மை மீது நிறைய சந்தேகம் இருக்கிறது. அதில்தான், கேள்வி எழுப்புகிறோம். இந்த மூன்று நபர்களும் குற்றம் செய்ததாக அவர்கள் இன்று சொல்லவில்லை; கிட்டத்தட்ட 2 வருடங்களாக இதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்கள்.
சிபிசிஐடி அறிக்கையிலேயே மிகப்பெரிய பிழை இருக்கிறது. முரளிராஜாவின் தந்தையான ஜீவானந்தத்திற்கும், பஞ்சாயத்து தலைவரது கணவரான முத்தையாவுக்கும் நடக்கும் பிரச்னை; இந்த பிரச்னையை ஒட்டித்தான், ஜீவானந்தம் தூண்டி விட்டு முரளி ராஜா இம்மாதிரி வேலைகளை செய்ததாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பஞ்சாயத்தில் ஜீவானந்தத்திற்கும், முத்தையாவுக்கும் பிரச்னை நடக்கவில்லை. முத்தையாவிற்கும் சதாசிவம் என்கிற பெரியவருக்கும்தான் நடந்தது.
சிபிசிஐடி அறிக்கையிலேயே மிகப்பெரிய பிழை இருக்கிறது.
‘வேங்கைவயல் மக்களுக்கு குடிநீர் வசதி, சாலைவசதி எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டேன்’ என முத்தையா அறிக்கை வாசிக்கும்போது, வசதிகள் ஏதும் செய்யவில்லை என்றும் பொய்யான அறிக்கையை வாசிப்பதாகவும் சதாசிவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், ‘நீங்கள் ஊராட்சிமன்ற தலைவர் இல்லை. உங்களது மனைவிதான் ஊராட்சி மன்ற தலைவர்’ என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது ஜீவானந்தத்திற்கும் முத்தையாவுக்கும் பிரச்னை நடந்தது,. அதன் காரணமாக மகனை தூண்டிவிட்டதாக சொல்கின்றனர். இதுதொடர்பாக, சதாசிவம் ஏற்கனவே ‘கேள்வியை எழுப்பியது தான் தான்’ என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
டிஎன்ஏ டெஸ்ட், இரத்தமாதிரி என எதிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இதே இளைஞர்களை ‘நீதான் செஞ்ச நீதான் செஞ்ச.. ஒத்துக்கோ, ஒத்துக்கோ’ என கடிவாளம் கட்டியதுபோல்தான் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல்நிலைத் தொட்டியின் மீது ஏன் ஏறிப்பார்த்தார்கள் என்பது தொடர்பாக முதல்நாளில் இருந்தே செய்திகள் வந்தது. நாலைந்து நாளாக அந்த மக்கள் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். புதுக்கோட்டையில் உள்ள மருத்துவர் ‘உங்களது குடிநீரில்தான் பிரச்னை இருக்கிறது. அந்த தொட்டியை சோதனையிடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். தொட்டியை சோதனையிடும்போதுதான் மலம் கலந்த விவகாரம் வெளியில் வருகிறது.
டிஎன்ஏ டெஸ்ட், இரத்தமாதிரி என எதிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இதே இளைஞர்களை ‘நீதான் செஞ்ச நீதான் செஞ்ச.. ஒத்துக்கோ, ஒத்துக்கோ’ என கடிவாளம் கட்டியதுபோல்தான் விசாரணை...
அம்மா தனது பையனிடம் பேசிய ஆடியோவை வெளியிடுகிறார்கள். அதில், ஒத்துக்கொள்ளக்கூடாது என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால், முழு ஆடியோவையும்தானே வெளியிட வேண்டும். என்ன நடந்தாலும் உண்மை பக்கம் நில்லுங்கள் என்பதுதான் அம்மா பேசியது. கிராமத்து மொழி அதுதான். 2, 3 நொடி பேசியதை மட்டுமே கட் செய்து, அதை ஆதாரம் என்கின்றனர். முழு ஆடியோவையும் வெளியிடுங்கள்.
அவையெல்லாம் நீதிமன்றத்தில் வெளியிடுவோம் என்றால், இதை மட்டும் மீடியாவிற்கு ஏன் கொடுக்கின்றீர்கள். உங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் வெட்டிக்கொண்டு வந்து கொடுக்கின்றீர்கள். குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், எங்களால் குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே சொல்லுங்கள்.
வேங்கைவயலை சுற்றி பலர் புகாரளிக்கின்றனர். எப்போதெல்லாம் புகாரளிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களையும் சம்மன் கொடுத்து வரச்சொல்லி மிரட்டுகின்றனர்.
குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், எங்களால் குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே சொல்லுங்கள்.
இந்த 2 வருடத்தில் ஒரு டாக்குமெண்ட்டைக் கூட சிபிசிஐடி நீதிமன்றத்தில் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது 20ஆம் தேதி கொடுத்துள்ளோம் என்கிறார்கள். அரசியல் ரீதியான அழுத்தம் இருக்கிறதா? இல்லையா?
விசாரணையில் குளறுபடி இருந்தால் மக்கள் சொல்லத்தான் செய்வார்கள். நேற்றில் இருந்து பெரும்பாலான கட்சிகள் இதைக்கண்டிக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது என முடித்துக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதே இளைஞர்கள், தங்களை ஒத்துக்கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக ஏற்கனவே புகாரளித்துள்ளார்கள். கடந்த 2 வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகையை வாங்கிப் பார்த்தால்தான் இவர்கள் எந்த விஷயத்தில் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பது தெரியவரும்.
விசாரணையில் குளறுபடி இருந்தால் மக்கள் சொல்லத்தான் செய்வார்கள். நேற்றில் இருந்து பெரும்பாலான கட்சிகள் இதைக்கண்டிக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டோம் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அங்கேயே இவர்கள்தான் குற்றவாளிகள் என ஏன் சொல்கிறீர்கள். அப்படியானால், உங்கள் நோக்கம் என்ன? உங்களுக்குத் தகுந்த மாதிரி தகவல்களைப் பரப்பினீர்கள் என்றால் அதை கேள்வி கேட்கத்தானே செய்வார்கள்.
தமிழக அரசின் முடிவில் உடன்பாடு இல்லையென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வார்கள். தமிழக அரசு அறிக்கை அளித்தால் அது வேதவாக்கா? அதுதான் உண்மையா? நீதிமன்றம் தீர்ப்பு சொல்லட்டும். சிபிசிஐடி அறிக்கை என்பது தீர்ப்பு அல்ல. அது விசாரணை அறிக்கைதான். இந்த விசாரணை பாரபட்சமாக நடந்துவருகிறது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. வெளிப்படையான விசாரணையும் இல்லை. நேர்மையான விசாரணையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
சிபிசிஐடி அறிக்கை என்பது தீர்ப்பு அல்ல. அது விசாரணை அறிக்கைதான். இந்த விசாரணை பாரபட்சமாக நடந்துவருகிறது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு.