பைசன் படத்தின் உண்மை கதாநாயகனான மணத்தி கணேசன் சிறுவயதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை..
செய்தியாளர் - பே.சுடலைமணி செல்வன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா, அனுபமா நடித்து வெளியாகியுள்ள படம் `பைசன்'. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள கதாபாத்திரம் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் வாழ்க்கை வரலாறு. இதை இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மேடையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மணத்தி கணேசன் குறித்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சொன்னதை இங்கே பார்க்கலாம்..
கணேசன் சிறுவயது முதலே கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளியில் விளையாடி பல பரிசுகளை வென்றார். அதைத் தொடர்ந்து மாவட்டம், மாநில அளவு என முன்னேறி இறுதியில் இந்திய அணிக்காக வென்று மூன்று முறை கோப்பையை பெற்றவர். அவரை எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் கபடி கணேசன் என்று தான் அன்பாக அழைப்போம். இந்த பைசன் படத்தின் மூலமாகத்தான் கணேசன் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்பதை பார்க்கிறோம் என்று தெரிவிக்கின்றனர்.
ஒரு சமயம் முக்கியமான விளையாட்டிற்கு முன்பு கணேசன் கையில் முறிவு ஏற்பட்டது குறித்து பேசியிருக்கும் உறவினர் சுரேஷ் குமார், “பைசன் திரைப்படம் பார்த்து எங்கள் உள்ளூர் கபடி அணியினர் அனைவரும் அழுதுவிட்டனர். இந்தப்படத்தில் கொஞ்ச நேரம் காமிக்கப்பட்டதிலேயே இவ்வளவு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார் என்றால், உண்மையில் எவ்வளவு போராட்டங்களை எதிகொண்டிருப்பார் என்பதை நினைத்தால், அதைத்தாண்டி அவர் வெற்றிபெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது..
கபடியில் இப்போதெல்லாம் எண்ட் லைன் என்பதே இல்லாமல் இருக்கிறது.. 5 பேருக்கு பின்னால் ஒருவர் இருந்தாலும் அவரை சென்று தொட்டுவரும் எண்ட் லைன் ஆட்டத்தில் கணேசனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.. இதுவரை அவரை போல ஒருவீரரை எங்கள் ஊர் பார்க்கவில்லை..
ஒருமுறை முக்கியமான போட்டிக்கு முன்னதாக அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. ஆனால் அந்தப்போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில், கையில் கட்டுப்போட்டுக்கொண்டு உடைந்த கையுடன் விளையாடினார்.. அந்தப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு மணத்தி கணேசன் என்ற பெயர் தென்மாவட்டங்களில் பிரபலமானது..” என்று பேசியுள்ளர்.
கணேசன் குறித்து பேசியிருக்கும் உறவினர் உமாதேவி, எங்கள் ஊரில் ஒருமுறை வெள்ளம் ஏற்பட்டபோது எங்கள் உயிரை காப்பாற்றியர் கணேசன் தான்.. சென்னையில் இருந்து எப்படி அந்தநேரத்தில் ஊருக்கு வந்தார் என்று எங்களுக்கு தெரியாது, ஆனால் சரியான நேரத்தில் வந்து வெள்ளத்தில் இருந்தவர்களை காப்பாற்றினார்.
கபடி என்றால் சிறுவயதிலிருந்தே அவருக்கு உயிர்.. ஆனால் கபடி விளையாட்டில் இவ்வளவு கஷ்டப்பட்டாரா என்பதை பைசன் படத்தை பார்த்தபிறகு தான் தெரிந்துகொண்டோம் என்று பேசினார்..