கபடி களம், வன்முறைக்கு எதிரான வாதம்... பைசன் எப்படி இருக்கு? | Bison Review | Mari Selvaraj | Dhruv
கபடி களம், வன்முறைக்கு எதிரான வாதம்... பைசன் எப்படி இருக்கு? | Bison Review (3 / 5)
தன் அடையாளத்துக்காக ஓடும் ஒருவன் ஊருக்கே அடையாளமாகும் கதையே பைசன்.
கிட்டான் (துருவ்) மணத்தி என்ற ஊரில் வாழும் இளைஞன். வறுமை சூழல், ஊரில் நிகழும் வன்முறை, ஒடுக்குமுறை என பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகும் அவனுக்கு இதில் இருந்து மீள கிடைக்கும் ஒரே வழி கபடி. எப்படியாவது ஊரின் கபடி அணியில் சேர நினைக்கும் அவனின் முயற்சிகள், அவனது தந்தை வேலுச்சாமியால் (பசுபதி) தடுக்கப்படுகிறது. ஊரில் பல வடிவங்களில் விரவி கிடக்கும் வன்முறையும், பகையும் இந்த கபடி போட்டியால் தூண்டப்படுமோ, மகனுக்கு ஆபத்து வருமோ என்ற பயம் அவருக்கு. இன்னொரு புறம் ஆதிக்க சாதியினரான கந்தசாமி (லால்), அவரை எதிர்த்து போராடும் பாண்டியராஜா (அமீர்) இருவரின் மோதல் ஊரை எப்போதும் ஒரு கலவரத்திற்கு தயாராக வைத்திருக்கிறது. இதனிடையே ராணியுடன் (அனுபமா) காதல், உறவுக்குள்ளேயே ஏற்படும் ஈகோ மோதல் இவையும் முளைக்கிறது. இந்த பிரச்சனை அனைத்தையும் தாண்டி, தான் நினைத்தது போல் கபடியில் கிட்டான் எப்படி சாதிக்கிறான் என்பதை சொல்கிறது இந்த பைசன் காளமாடன்.
மணத்தி கணேசன் கதையை தழுவி, அதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு செய்தி சொல்ல முயன்றிருக்கிறார் மாரி செல்வராஜ். அதன் உள்ளே அமீர், லால் பாத்திரங்கள் மூலமாக சில நிஜ சம்பவங்களை உள்ளே வைத்து வன்முறை பாதை எங்கே சென்று முடியும் என்பதையும் காட்டி இருக்கிறார்.
துருவ் உடல் அளவில் கடுமையான உழைப்பை கொடுத்திருப்பது, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மைதானத்தில் வெறித்தனமாக ஓடுவது, கபடி களத்தில் வலுவாக ஆடுவது, சண்டை காட்சிகளில் விளாசுவது என சிறப்பு. நடப்பவை எல்லாவற்றையும் குழப்பத்தோடு மட்டுமே அணுகும் பாத்திரத்தில் துருவ் பொருந்துகிறார் தான். ஆனால் முக்கியமான காட்சிகளில் அவரது நடிப்பில் இன்னும் கூட கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். இப்படத்தின் மிரட்டலான நடிப்பு பசுபதியுடையதே. ஒரு தந்தையின் பதைபதைப்பு படம் முழுக்க அவரிடம் உணர முடிகிறது. சார்பட்டா படத்தில் ஒரு குத்துச்சண்டை போடும் காட்சியை ஒரு வாத்தியாராக பார்த்து ரசிக்கும் போது இருந்த மிடுக்கான நடிப்பும், பைசனில் ஒரு தந்தையாக பயம் கலந்த சந்தோஷத்துடன் போட்டியை பார்க்கும் நடிப்பிலும் எத்தனை வித்தியாசம். தான் ஒரு அசத்திய கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தம்பியை உற்சாகப்படுத்துவது, அவன் குழப்பங்களுக்கு தெளிவு கொடுப்பது என அக்காவாக ரஜிஷா கச்சிதம். அனுபமா தன் காதலை வெளிப்படுத்தும் இடங்களில் கவனிக்க வைக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அமீர், லால் பாத்திரங்கள் கதைக்கு கனம் சேர்க்கின்றன. மதன், லெனின் பாரதி, அழகம் பெருமாள் மிக சிறப்பு.
வன்முறை போக்கு, மனிதனின் ஈகோ, தன் சுய கௌரவம் என நினைத்து செய்யும் விஷயம் என்ன எனப் பலவற்றை தொட்டிருக்கிறார் மாரி. அதிலும் அமீர், நாம் எதற்காக போராட ஆரம்பித்தோம் என்பதை மறந்து, சண்டையிடும் உணர்வை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறார்கள் என சொல்லும் வசனம் இப்படத்தின் ஆன்மா போல ஒலிக்கிறது. எழிலரசு ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். கிராமத்தின் அழகியலை, வன்முறையை, தெய்வ வழிபாட்டை, கபடியை என ஒவ்வொன்ற காட்டுவதிலும் அத்தனை நேர்த்தி. நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பு. சத்யன் குரலில் வரும் தென்னாடு துவங்கி நிவாசின் தீக்கொழுத்தி வரை ஒவ்வொன்றுமே படத்தோடு பார்க்கவும், கேட்கவும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையாலும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இன்னும் படத்தில் சொல்லப்படும் கதைகள் அனைத்தும் கோர்வையாக இருந்திருக்கலாம் என்பதே. துருவின் கதை, அமீர் - லால் மோதல், அனுபமா காதல் என மூன்று கதைகள், முடிந்த வரை அதனை இணைத்து ஒரே தொடர்ச்சிக்குள் கொண்டு வர காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தாலும், துண்டு துண்டாகவே அவை இருப்பதாக தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் மற்ற கதைகளை விட அனுபமா காதல் கதை எல்லாம் சுத்தமாக படத்தில் சேராமல் துருத்திக் கொண்டு தெரிகிறது. அல்லது படத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் தீவிரத்தன்மை இல்லாத காட்சிகளாக வந்து போகிறது. ரஜிஷா விஜயன் சார்ந்த காதல் கதை, லெனின் பாரதி சார்ந்த காட்சிகள், லால் கதாப்பாத்திரத்தை நியாயப்படுத்த வைக்கப்பட்டுள்ள ஒரு காட்சி என படத்தில் தூக்குவதற்கு பல இடங்கள் இருந்தும் அவற்றை அப்படியே படத்தில் வைத்திருப்பது மைனஸ்.
மேக்கிங்காக மாரி செல்வராஜுக்கு ஒரு காட்சியின் ஸ்டேஜிங் மிக அழகாக கைகூடிவிட்டது. அது ஒரு பேருந்து காட்சியில் கிடாவை வைத்து வரும் சண்டைகாட்சி, அமீரை ஒரு வீட்டுக்குள் கூட்டி வரும் காட்சி போன்றவற்றிலேயே அழகாக தெரியும். மெல்ல மெல்ல டென்ஷனை பில்ட் செய்யும் விதம் அவ்வளவு நேர்த்தி. ஆனால் இந்த நேர்த்தி ஒரே படத்தின் திரைக்கதைக்குள் நிகழ்வுகள் அனைத்தையும் கொண்டு வருவதிலும் இருந்திருக்கலாம்.
துருவ் நடித்துள்ள பாத்திரம் நிஜமாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதால், அந்த கதாபாத்திரத்திற்கு எதுவும் ஆகாது என்ற எண்ணம் நமக்கு ஆரம்பத்திலேயே வருகிறது. அவர் மேல் நடக்கும் தாக்குதல்கள் எதுவும் நமக்கு பதைபதைப்பாக இல்லை. மேலும் படத்தின் துவக்கத்திலேயே நிகழ் கால காட்சியை காட்டுவது பின்னால் வரும் பல காட்சிகளுக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. ஒரு பயோபிக் மூலம் வன்முறைக்கு எதிரான வாதத்தை முன்வைப்பதும், இளைஞர்களுக்கான முன்மாதிரி யாராக இருக்க வேண்டும் என்பதையும் காட்டுவதில் மாரி செல்வராஜ் வென்றிருக்கிறார். அதனை ஒரு படமாக அழுத்தமான காட்சிகள் மூலமாக ஆழமாக சொல்லி இருக்கிறார். அதற்கான திரைக்கதையும் இன்னும் வலுவாக இருந்திருந்தால் மிக முக்கியமான படைப்பாக மாறி இருந்திருக்கும்.
ஆனால் ஒட்டு மொத்தமாக ஒரு சுவாரசியமான படம் பார்த்த உணர்வு மட்டும் பைசன் பார்த்து முடித்ததும் வரும் என்பது உறுதி.