பைசன் படத்தின் நிஜ ஹீரோ | ”அவரை அணியிலேயே சேர்க்க மாட்டோம்..” - சகவீரர் சொன்ன கசப்பான உண்மை!
செய்தியாளர் - பே.சுடலைமணி செல்வன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா, அனுபமா நடித்து வெளியாகியுள்ள படம் `பைசன்'. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் துருவ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை நாயகன் மணத்தி கணேசன் தான்.
படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள கதாபாத்திரம் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் வாழ்க்கை வரலாறு. இதை இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மேடையில் தெரிவித்திருந்தார்.
இந்த மணத்தி கணேசன் யார்..? இவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது. ஊர்மக்கள், உறவினர்கள், அவருடன் விளையாடிய நண்பர்கள் கூறுவது என்ன? இங்கே பார்க்கலாம்..
பைசன் படத்தின் நிஜ ஹீரோ..
கணேசன் சிறுவயது முதலே கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளியில் விளையாடி பல பரிசுகளை வென்றார். அதைத் தொடர்ந்து மாவட்டம், மாநில அளவு என முன்னேறி இறுதியில் இந்திய அணிக்காக வென்று மூன்று முறை கோப்பையை பெற்றவர். அவரை எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் கபடி கணேசன் என்று தான் அன்பாக அழைப்போம். இந்த பைசன் படத்தின் மூலமாகத்தான் கணேசன் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்பதை பார்க்கிறோம் என்று தெரிவிக்கின்றனர்.
ஒரு சமயம் முக்கியமான விளையாட்டிற்கு முன்பு அவரது கையில் முறிவு ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்டாக பார்க்காமல் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அதன் பிறகு தான் அனைத்து பகுதிகளிலும் மணத்தி கணேசன் என்று பெயர் வந்தது என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவயதில் எங்கள் மணத்தி அணியில் விளையாட கணேசனை சேர்க்க மாட்டோம். ஆனாலும் தொடர்ந்து எங்களுடன் பயணிப்பார். ஒரு சில நேரங்களில் விளையாட செல்லும் போது எதிர் அணியில் வீரர்கள் குறைவாக இருந்தால் அந்த அணியுடன் சேர்ந்து விளையாடுவார். அப்படித்தான் அவரின் விளையாட்டு திறமையை பார்த்து எங்கள் அணியில் சேர்த்தோம். அவரை அணியில் சேர்த்தபிறகு எங்கள் அணி செல்லும் இடமெல்லாம் வெற்றி பெற்றது.
அவரது விளையாட்டு திறமையை பார்த்து பல்வேறு இடங்களில் இருந்தும் வாய்ப்பு வந்தது. தற்போது அவருடைய வளர்ச்சி எங்களுக்கு பெருமையாக இருப்பதாக, அவருடன் விளையாடிய முன்னாள் கபடி வீரர் எட்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
அவரை அணியில் சேர்க்கமாட்டோம்..
மணத்தி கணேசனின் உறவினருமான சிறுவயதில் கபடி அணியின் மூத்தவீரருமான எட்வின் சாம்ராஜ் பேசும்போது, மணத்தியில் கணேசனிற்கு முன்பே ஊரிலிருந்த லயன்ஸ் கிளப் கபடி அணியில் நான் விளையாடினேன். அப்போதெல்லாம் கணேசன் சிறுவனாக இருப்பதால், அவரை நாங்கள் அணியில் சேர்க்க மாட்டோம். ஆனால் அவர் எங்களுடன் பயிற்சிக்கு வருவதை தவறாமல் செய்வார். தொடர்ந்து பள்ளியிலும் சென்று விளையாடுவார், ஊரிலும் வந்து இரவு 9 மணிவரை விளையாடுவார். ஆரம்பத்தில் விளையாட்டில் தடுமாறினாலும், புள்ளிகள் பெறவேண்டும் வெற்றியடையவேண்டும் என்ற கேரக்டர் அவருக்குள் இருந்தது.
கபடி தொடர் விளையாடும்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்காதா, தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியாதா என்ற எண்ணத்தில் எங்கள் அணியுடன் கூட வந்துவிடுவார். அங்கு வந்தபிறகு மற்ற அணியில் ஆடுவதற்கு வீரர்கள் குறைவாக இருந்தால், அந்த அணியில் சேர்ந்துகொள்வார். அப்படி அவர் மற்ற அணிகளுக்கு விளையாடி வெற்றிபெறும்போது தான் அவருடைய திறமையை நாங்கள் தெரிந்துகொண்டோம். பிறகு எங்கள் அணியில் அவரை சேர்ந்தபிறகு சென்ற இடமெல்லாம் நாங்கள் வெற்றிபெற்றோம்.. உள்ளூரில் மணத்தி அணியா? அவர்கள் முதல் பரிசு அடிப்பார்கள் என்ற பெயர் கிடைத்தது..
அப்படியே பள்ளியிலும் முன்னேறி அவர் விளையாடிய சாயர்புரம் பள்ளி மாநில அளவில் வெற்றிபெற்றது. கபடியை தாண்டி ரன்னிங் முதலியவற்றிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். கபடியில் சிறப்பாக விளையாடும் கணேசனின் ஆட்டத்தை பார்த்த மற்ற கிளப்புகளும் ‘இந்த பையன் நல்லா விளையாடுறான்னு’ அவரை விளையாட அழைத்துக்கொள்வார்கள்.. அவருடைய ஆட்டத்திறன் பெரிய அளவில் பேசப்பட்ட பிறகு மாவட்ட அளவில் விளையாடுவதற்கு கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
கிளப் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்த போது புகழ்பெற்ற சன் பேப்பர் மில் கிளப்பிலிருந்து அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்றால் உத்யோகத்திற்கு வழிகிடைக்கும் என்று அவருடன் 2 பேர் என 3 பேர் அங்கு சென்று சேர்ந்தனர். அங்கு விளையாட்டு வீரர்கள் நன்றாக கவனிக்கப்படுவார்கள் என்பதால், நல்ல பயிற்சிபெற்ற கணேசன் தன்னுடைய ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்றார்..
அதன்பிறகு மாநில அளவில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்ததால், முழு அளவில் மாநில அளவில் கவனம் ஈர்த்து தமிழ்நாடு அணியில் தேர்வுசெய்யப்பட்டார். அவர் இடம்பெற்ற தமிழ்நாடு அணி தொடர்ந்து 3 முறை தேசிய அளவில் சாம்பியனாக வலம்வந்தது. அவருக்குள் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற வெறி இருந்தது, அதை களத்தில் செய்தும் காட்டுவார்.. அப்படி மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவருடைய ஆட்டம்தான் அவரை இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..
இந்திய அணிக்காக ஜப்பானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களம்கண்டார் கணேசன். இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளைச் சேர்த்த அவர், இந்திய அணி சாம்பியனாக மாற முக்கிய பங்காக இருந்தார்” என்று பெருமையுடன் கூறினார்.
மேலும் கபடி கணேசன் கபடி அகாடமி ஒன்றை உருவாக்கி தன்னைப் போல பல வீரர்களை உருவாக்கும் கனவோடு இருக்கிறார்.. அதை நிறைவேற்ற தமிழக அரசும், கபடி தன்னார்வ நிறுவனங்கள் உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை எட்வின் சாம்ராஜ் வைத்துள்ளார்..