தமிழகத்தில் நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டினாலும், இளைஞர்களின் அதிருப்தி, வேலைவாய்ப்பு பிரச்சினைகள், ஒப்பந்த ஊழியர்களின் நிலை போன்ற விடயங்களில் திமுக தோல்வியடைந்ததாக சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அதேசமயம், அரசியல் மாற்றம் வேண்டுமென்ற இளைஞர்களின் கோரிக்கையும் பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு வெளியாகவிருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக 3 கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக களம்கண்டிருக்கும் விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு முதலில் யாரும் வரவேற்பு தரமாட்டார்கள், கூட்டம் கூடுவது ஓட்டாக மாறாது என்று சொல்லப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவெகவை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்ற இடத்திற்கு நகர்த்தியுள்ளது.
விஜய் பெரும்பான்மை பெறலாம் என்ற கருத்துகள் இருந்துவரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு சாதகமான கருத்துகளை பொதுவெளியில் வெளிப்படுத்தி வருகின்றன. தேர்தல் முடிவில் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என வைகோ கூறியிருந்த நிலையில், தற்போது அரசியல் மாற்றம் வேண்டுமென்ற இளைஞர்களின் எழுச்சி வரவேற்கத்தக்கது என்று சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், ”பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கும் சூழலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெருவாரியான இடங்களில் வென்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் நிலையே இருக்கிறது. அதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம், ஆனால் அதேநேரத்தில் வரும் காலங்களில் திமுக எப்படியான ஆட்சியை கடைபிடிக்கப்போகிறது என்பதை நாம் பார்க்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இந்த தேர்தலில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைந்தது 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோதும் திமுக அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதற்கு திமுக மறுத்துவிட்டது. ஆனாலும் கூட பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமளிக்க கூடாது என்பதற்காகவே தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிட்டோம். எனவே அமையப்போகின்ற இந்த திமுக ஆட்சி எப்படியான ஆட்சியாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. காரணம் சொல்லவேண்டுமென்றால் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியது உட்பட வேலையில்லா திண்டாட்டத்திற்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இரட்டைவிகிதம் அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெருமை பேசுகிறார்கள். அதற்கு முக்கியகாரணமாக இருந்த உழைக்கும் வர்க்கத்திற்கு அரசு பதிலுக்கு என்ன கொடுத்துள்ளது என்பது பெரிய கேள்வியாகத் தான் இருக்கிறது.
முக்கியமாக மற்ற தேர்தலை விட இந்த தேர்தலில் இளைஞர்களின் எழுச்சி அதிகமாக இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் நினைக்கும் எழுச்சியை நாம் பார்க்கிறோம். அது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
திமுக ஆட்சி மீண்டும் அமைந்தாலும் அதில் மக்கள் நலன் பாதிக்கும்போது, ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தம் செய்யாதது, போராடும் தொழிலாளிக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது, தொழிலாளிகள் மீது வழக்கு போட்டு கைது பன்றாங்க, இப்படியான கோரிக்கைகளை முன்னெடுத்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் நிச்சயமாக போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று பேசியுள்ளார்.