திமுக கொடியுடன் உள்ள காரில் சென்ற இளைஞர்கள், பெண்களை அச்சுறுத்திய காட்சி புதிய தலைமுறை
தமிழ்நாடு

திமுக கொடியுடன் பெண்களது காரை துரத்திய நபர்கள்.. புகாரளித்த பெண்களது பெயர்கள் வெளியானதால் சர்ச்சை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தியதாக புகாருக்கு ஆளான இளைஞர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

PT WEB

செய்தியாளர் சாந்தகுமார்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தியதாக புகாருக்கு ஆளான இளைஞர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தி சர்ச்சையான நிலையில், சிறிது நேரத்தில் அந்த விவரங்கள் நீக்கப்பட்டன.

திமுக கொடியுடன் உள்ள காரில் சென்ற இளைஞர்கள், பெண்களை அச்சுறுத்திய காட்சி

சென்னை கானத்தூர் பகுதியை சேர்ந்த பெண், தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த 25-ஆம் தேதி ஈசிஆர் சாலையில் சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில், முட்டுகாடு படகு குழாம் மேம்பாலத்தில், பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் முகத்துவாரத்தை கண்டு ரசிப்பதற்காக அங்கு காரை நிறுத்தியுள்ளனர். அங்கே திமுக கட்சி கொடி பொருத்திய காரில் சில இளைஞர்கள் இருந்ததாகவும், அவர்கள் குறித்து சந்தேகம் எழுந்ததால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் தங்கள் காரில் துரத்தி வந்ததாக பெண்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிய பெண்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஈசிஆர் சாலையில் காரை குறுக்கே விட்டு மீண்டும் பெண்கள் சென்ற காரை அந்த இளைஞர்கள் மடக்கினர். அதுமட்டுமல்லாமல் காரில் இருந்த நான்கு பேரில் ஒருவர் திடீரென காரில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்து பெண்களை மிரட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்ததை அடுத்து, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். காரில் துரத்தி வந்த இளைஞர்கள் தங்கள் காரை அந்த பெண்கள் இடித்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் இதனை பெண்கள் தரப்பு மறுத்தனர். மறுநாளே கானத்தூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்ற கானத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் புகாரை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டை மட்டும் வழங்கி விட்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில்தான் திமுக கட்சிக்கொடி பொருத்திய காரில் அந்த இளைஞர்கள் வந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து கானத்தூர் காவல்நிலையத்துக்கு விரைந்த பள்ளிகரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், வழிமறித்தல், மிரட்டல், சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

இதனிடையே புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தாம்பரம் மாநகர காவல்துறை தமிழில் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி சர்ச்சையாகியுள்ளது. புகார் அளித்த பெண்ணின் விவரங்களை எப்படி வெளியிடலாம் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எப்.ஐ.ஆர். விவரத்தை வெளியிட்டு சர்ச்சையான நிலையில், இப்போதும் அது போல் வெளியிட்டிருப்பதாக அதிமுக மாணவரணி குற்றம்சாட்டியது. இந்நிலையில், புகார்தாரர் பெயரை நீக்கிவிட்டு செய்தி குறிப்பை தாம்பரம் மாநகர காவல் துறை வெளியிட்டது.