உ.பி | இப்படியொரு வசதியா..! பெண்களின் பாதுகாப்புக்காக பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ’SOS’ காலணி!
உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக SOS எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணிகளை வடிவமைத்து தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், பல வித்தியாசமான பாதுகாப்பு சாதனங்கள், கண்டுபிடிப்புகளும் உருவாவதை பார்க்க முடிகிறது. பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன் போன்றவை அவற்றில் சில.
அந்தவகையில் இணைந்திருக்கிறது உத்தரப்பிரதேச மாணவர்களின் புதுவித காலணி ஒன்று. உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஐசி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை உருவாக்கியுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலணியின் கீழ், பட்டன் ஒன்று பொறுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்த காலணியில் கீழ் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும் ,குடும்பத்தினர், நண்பர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் என தேவையானவர்களுக்கு எச்சரிக்கை ஒலி சென்றுவிடும். இதன் மூலம், அவர்கள் இருக்கும் இருப்பிடத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
மேலும், இதில் உரையால்கள் கேட்கும் வகையில், வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்விலை வெறும், ரூ, 2500 மட்டுமே.
இதுகுறித்து கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான அம்ரித் திவாரி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்
“ நாங்கள் உருவாக்கிய செயலி, காலணியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் காலணியில் கேமராவை பொறுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், சுற்றியுள்ள இருப்பிடம் மற்றும் காட்சிகளும் பகிரப்படும். பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
சிறப்பம்சம்:
இந்த செருப்பு பாதுகாப்பு குறித்தான தகவல்களை மட்டும் அனுப்பாது. இந்த செருப்பை அணிந்திருக்கும் ஒருவர், தாக்குதல் நடத்தும் ஒருவரை மிதித்தால், இந்த செருப்பில் இருந்து ஒருவகையான மின்சாரம் வெளியேறி தாக்குதல் நடத்துபவரை நிலைக்குலையச் செய்யும். அதே நேரத்தில் செருப்பை அணிந்திருப்பவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.