சென்னையில் சாலைகளை மேம்படுத்த, பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாதசாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பெருஞ்செய்தி பகுதியில் இப்போது பார்க்கலாம்...
சென்னை மாநகராட்சியில், அரசு பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில், பல்வேறு வசதிகள் இருந்தாலும், அதைவிட்டு இறங்கிவந்து பார்த்தால், சாலைகள் மற்றும் அதையொட்டி இருக்கும் நடைபாதைகள் பெரும்பாலும் மோசமான நிலையிலேயே உள்ளன.
நகரின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் காரணமாக, நடைபாதைகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான பாலங்கள் இடிக்கப்பட்டு, சேவைச் சாலைகள் வழக்கமான சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தியாகராயநகரில் உள்ள பாண்டி பஜாரில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக, 39 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நடைபாதைக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், பார்க்கிங் பிரச்சினை, கடைகளின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் நடைபாதையை சிரமமின்றி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
நடைபாதை, சைக்கிள் ஓட்டுவதற்கான வழி மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், முழுமையான தெருக்கள் திட்டம் என்ற ஒரு புதிய திட்டம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக வங்கி மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து தொடங்கிய இந்த திட்டத்தின்கீழ், ராயபுரம் எம்.சி.சாலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை, திருவொற்றியூர் டோல்கேட் சாலை ஆகிய பகுதிகளில், பணிகள் நடைபெற்று வருகின்றன.
நுங்கம்பாக்கத்தில் உள்ள கே.என்.கே சாலையில் இந்த திட்டப் பணிகள், இம்மாதம் முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயபுரத்தில் உள்ள எம்.சி. சாலையில் இந்த பணிகள், இந்த ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையிலும், திருவொற்றியூர் டோல்கேட் சாலையிலும், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நகரில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக நடைபாதைகளை அமைக்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நடைபாதைகளை சீரமைக்கும் பணிகளுக்காக 2 ஆயிரத்து 367 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சென்னை பெருநகர மாநகராட்சி செலவு செய்து வருகிறது.
இத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், உள்கட்டமைப்பு மேம்பாட்டை மட்டும் நம்பி இருக்காமல், போக்குவரத்து விதிகளைக் கடுமையான முறையில் அமல்படுத்துவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.