குழப்பத்திற்கு தீர்வு.. ராமதாஸ் புதுத்திட்டம்.. என்ன நடக்கிறது பாமகவில்?
பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் 17ஆம் தேதி தனது தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். இதற்கு போட்டியாக அன்புமணியும் பொதுக்குழுவை கூட்டிய நிலையில், நீதிமன்றம் வரை சென்று அன்புமணி கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுவை நடத்தினார். அதில், பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழு செல்லாது என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தலைவர் பதவியில் அன்புமணி நீடிக்க உரிமை இல்லை எனவும், தமக்கு தாமே நிர்வாக தலைவர் என்று அறிவித்தது செல்லாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் 17ஆம் தேதி பாமக நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழு சட்ட ரீதியாகவும், கட்சி விதிகள் படியும் செல்லாது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அன்புமணியின் ஆதரவாளருமான பாலு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த பாலு, “9ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுதான் சட்டப்பூர்வமான பொதுக்குழு. அதற்குப் பிறகு அது 17ஆம் தேதியாக இருந்தாலும் அல்லது வேறு தேதிகளில் நடத்தப்பட்டாலும் அது பொதுக்குழுவாகவே சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிறுவனராக மருத்துவர் ராமதாஸ் கூட்டம் நடத்தலாம். பொதுக்குழு நடத்துவது என்பது மருத்துவர் அன்புமணி ராமதாஸால் மட்டும்தான் நடத்த முடியும். அதுதான் சட்டப்பூர்வமானது. அதற்குதான் தேர்தல் ஆணையமும் உரிய அங்கீகாரத்தை வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், 17ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் அனைத்திற்கும் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைப்பார் என பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கோபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்குழுவை நடத்துவதற்கு மருத்துவர் ராமதாஸ்க்கு அதிகாரம் இல்லையென்றால் வேறு யாருக்கு அதிகாரம் இருக்கிறது. கட்சியை நிறுவியர் மருத்துவர் ராமதாஸ்தான். வருகிற 17ஆம் தேதி இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி நிச்சயம் கிடைக்கும். மருத்துவர் ராமதாஸ் முற்றுப்புள்ளியை வைப்பார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இப்படியான சூழலில், பாமகவில் தனது அதிகாரத்தை நிரூபிக்கும் வகையில் 2 நாட்களில் அன்புமணி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தின் போது தனது தலைமையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.