பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கண்ணியம், மனிதநேயம் மற்றும் தலைமைப் பண்புகள் தனித்துவமானவை. அரசியல் எதிரிகளைக்கூட மதித்து நடந்த அண்ணா, நவீன தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரிய உதாரணம். அண்ணாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவோம்...
அரசியல் வரலாற்றில் இப்படியும் ஒரு அரவணைப்பாளரைப் பார்க்க முடியுமா? இப்படியும் ஒரு கண்ணியரை கற்பனை செய்யமுடியுமா? நான் கண்டதும் கொண்டதும் ஒரேதலைவர் என்று பெரியாரை அண்ணா குறிப்பிட்டாலும், அவருடனான முரண்பாடுகளால் தான் தனிகட்சிகண்டார் அண்ணா. ஆனால், பிற்காலத்தில் அண்ணாவை பெரியாரை எவ்வளவோ ஏசினாலும், அண்ணா ஒருநாளும் பெரியாரை தாக்கியதில்லை.
அண்ணா காலத்தில் தமிழ்நாட்டின் பெரிய தலைவர் காமராஜர். அவரை எதிர்த்துதான் அரசியல்செய்தார் அண்ணா. ஆனாலும், “குணாளா, குலக்கொழுந்தே!” என்று காமராஜரை கொண்டாடினார் அண்ணா. தேர்தலில் காமராஜர் அவருடைய சொந்த தொகுதியில் தோற்றபோது, துடித்துப்போனவர் அண்ணா. “காமராஜர் தோற்கலாமா? காமராஜர் இடத்துக்கு இன்னொரு தமிழர்வர 100 ஆண்டுகள் ஆகுமே” என்று வருந்தியவர் அண்ணா.
1937இல் பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கொண்டுவந்தபோது ராஜாஜி அரசுக்கு எதிராக இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர் அண்ணா; அதே ராஜாஜி தன்னுடைய நிலைப்பாட்டை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டபோது 1964இல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்கு ராஜாஜியை தலைமை வகிக்கச் சொன்னவர்அண்ணா.
தன்னையே எதிர்த்துப் போராடினாலும், சம்பத்தின் உண்ணாவிரத போராட்டத்தை எண்ணி, “தம்பிபசி பொறுக்கமாட்டானே!” என்று வருந்தியவர், பழரசத்தோடு போராட்டக்களம் நோக்கிச் சென்றவர் அண்ணா.
தமிழ்நாட்டின் முதல்வராக 1967இல் பதவியேற்றார் அண்ணா. அதுதொடங்கி அரைநூற்றாண்டுக்கும் மேலாக அவரை அடியொற்றி வந்தவர்களே தமிழகத்தை ஆள்கின்றனர். நவீன தமிழகத்தின் பேராட்சியாளர்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா மூவருமே அண்ணாவை தம் வழிகாட்டியாகப் பார்த்தனர்; அவருக்கு முன்னோடியாக பிறந்து, அரசியல் நிமித்தமாக அவரால் எதிர்க்கப்பட்டாலும் ராஜாஜி, காமராஜர், பக்தவசலம் எல்லோராலும் மதிக்கப்பட்டவர் அண்ணா; எல்லோரையும் நேசித்தவர் அண்ணா. யார் புழுதி வாரி தூற்றினாலும், “வாழ்க வசவாளர்கள்!” என்று புன்னகைத்தபடி கடந்தவர் அண்ணா!
அரசியல் தலைவர்கள் எப்படி காலமெல்லாம் மாணவர்களாக திகழ வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணர் அண்ணா. காங்கிரஸ் மட்டும் அல்ல; இடதுசாரிகள், வலதுசாரிகள் எனப் பல தரப்புகளிடமிருந்தும் மாறுபட்டு நின்றவர் அண்ணா. இந்தியாவின் எல்லாக் கட்சிகளும் டெல்லியை தலையாகவும் மாநிலங்களை கிளைகளாகவும் பார்த்தபோது, அண்ணாவோ மாநிலங்களின்தொகுப்புதான் இந்தியா என்றார்; மாநிலங்கள் இல்லாமல் இந்தியாவுக்கு என்று ஒரு மையம் இல்லை என்பதை உரக்கச் சொன்னார். எல்லோரும் ‘தேசியம்’ எனும் கருத்தை முன்வைத்தால், அவர் ‘தாயகம்’ எனும் கருத்தை முன்வைத்தார். பொருளாதாரத்திலும் கேப்டலிஸம், கம்யூனிஸத்தைவிட மிதவாத சோஷலிஸமே அண்ணாவுக்கு அணுக்கமானதாக இருந்தது.
வெளியுறவுக் கொள்கையில் ஆசியாவை மையப்படுத்தி சிந்திக்க அவர் தூண்டினார். இப்படி ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்த, மாறுபட்ட பார்வை கொண்டிருந்தார் அண்ணா என்றாலும், எதிர் தரப்பு தலைவர்களையும் மிகவும் நேசித்தார்.
தமிழ்நாட்டில் எப்படி ராஜாஜி, காமராஜர் என்று தான் எதிர்த்த தலைவர்களையெல்லாம் கொண்டாடினாரோ, அப்படி தேசிய அளவிலும் அவருக்கு பிரியமான தலைவர்கள் இருந்தனர். காங்கிரஸை எதிர்த்தார் என்றாலும், காந்தியை உலகின் ஒளி என்றார். காந்தி சிலைகளை திறந்தார். நேருவை “கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்” என்றார். அன்றைய நாடாளுமன்றத்தில் வலதுசாரிகளில் வாஜ்பாய் மீதும், இடதுசாரிகளில் பூபேஷ் குப்தா மீதும் பெருமரியாதை கொண்டிருந்தார் அண்ணா.
பூபேஷ் குப்தா உரைகளைக் கேட்க நாடாளுமன்ற கூட்டங்களை தவறவிட்டுவிடக் கூடாது என்று அண்ணா ஓடினார் என்றால், வாஜ்பாயின் பேச்சைக் கேட்க டெல்லி வீதி கூட்டங்களில் தரையில் அமரவும் அண்ணா தயங்கவில்லை. இந்திக்கு எதிராக சண்டமாருதம் செய்தபோதும், எதிர்த்தரப்பினரின் நியாயம் என்ன என்பதை புரிந்துகொள்ள கடைசி வரை முனைந்தார் அண்ணா.
ஆச்சரியமூட்டும் ஒரு தகவல் தெரியுமா? பிற்காலத்தில், தன்னுடைய கவிதை தொகுப்பை தமிழில் கொண்டு வந்தார் வாஜ்பாய். அதை அண்ணாவுக்குத்தான் சமர்ப்பித்திருந்தார். அண்ணாவைப் பற்றி வாஜ்பாய் சொன்னது இது: “தமிழ்நாடு என்றாலே என்னுடைய நினைவில் உடனே வருபவர் திராவிட இயக்க ஜாம்பவான் அண்ணாதுரைதான். சிறந்த நாடாளுமன்றவாதி. தமிழ் மக்களின் உணர்வுபூர்வ வீரர்!”
அதனால்தான் அரசியலில் என்றும் கண்ணியத்துக்கான உதாரணராகப் போற்றப்படுகிறார் அண்ணா!