Idly Kadai
Idly KadaiDhanush

"உழைத்த காசில் சாப்பிட்ட இட்லியின் சுவை" - தனுஷின் நெகிழ்ச்சி பேச்சு | Dhanush | Idly Kadai

என் குழந்தை பருவத்தின் மிக முக்கியமான கேரக்டர் அந்த இட்லி கடை. எப்படியாவது தினமும் அங்கு இட்லி சாப்பிட வேண்டும் ஆனால் கையில் காசு இருக்காது.
Published on

தனுஷ் இயக்கி நடித்துள்ள `இட்லி கடை' அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி கூறிய தனுஷ், `இட்லி கடை' கதைக் கரு உருவான விதத்தை பற்றியும் கூறினார்.

"இட்லி கடை... அதென்ன டைட்டில், இன்னும் பவர் ஃபுல்லாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாமே என்கிறார்கள். பொதுவாக ஒரு சில படத்திற்கு ஹீரோவின் பாத்திர பெயரையே தலைப்பாக வைப்பார்கள். இந்தப் படத்தின் ஹீரோ இட்லி கடைதான், அதனால் தான் இந்த பெயர். ஒரு இட்லி கடையை வைத்து ஒரு கதை சொல்லலாம் என ஏன் தோன்றியது என்றால், எங்கள் நண்பர்கள் எல்லாம் ஒரு மீட்டிங்கிற்காக வெளிநாடு சென்றோம். மீட்டிங் முடிந்த பின் அவர்கள் சாப்பிட சென்றுவிட்டார்கள். நான் தனியாக ரூமிற்கு சென்றேன். நான் தனியாக இருக்கும் போது என் துணை இளையராஜா சார் தான். ஏரிக்கரை மேலிருந்து பாடல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சில பாடல்களுக்கு சக்தி இருக்கும். நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலத்திற்கு அது நம்மை அழைத்து செல்லும். இந்தப் பாடல் என்னை, என்னுடைய 8வது வயதில் நான் என் அம்மா ஊருக்கு சென்ற காலங்களுக்கு அழைத்து சென்றது. அந்த கிராமத்தில் ஒரு இட்லி கடை இருந்தது. என் குழந்தை பருவத்தின் மிக முக்கியமான கேரக்டர் அந்த இட்லி கடை. எப்படியாவது தினமும் அங்கு இட்லி சாப்பிட வேண்டும் ஆனால் கையில் காசு இருக்காது. அப்போது வயலில் இறங்கி பூப்பறிக்க செல்வார்கள். எவ்வளவு பூவோ அதற்கு தகுந்த கூலி. எனவே நானும் என் அக்கா எல்லோரும் காலையில் எழுந்து பூப்பறிக்க செல்வோம். அதற்கு கூலியாக 2 ரூபாய் கிடைக்கும். அதை எடுத்துக் கொண்டு, தோட்டத்தில் போய் ஒரு குளியலை போட்டுவிட்டு துண்டைக்கட்டி கொண்டு தக் லைஃப் ஆக நடந்து வருவோம். கடைக்கு சென்று உழைத்த காசை கொடுத்து சாப்பிட்ட அந்த இட்லியின் சுவையும், சந்தோஷமும், நிம்மதியும் பெரிய பெரிய உணவகங்களில் சாப்பிட்ட போது கூட கிடைக்கவில்லை. இந்தப் பாட்டு என்னை அந்த இட்லி கடைக்கு கூட்டி சென்றது. இப்போது நான் அந்த இட்லி கடைக்கு சென்றால் எப்படி இருக்கும், அந்த இட்லி கடையை வைத்து ஏன் நாம் ஒரு படம் எடுக்க கூடாது? அது வெறுமனே இட்லி கடை மட்டுமல்ல, அந்த கிராமத்தில் என்னை பாதித்த உண்மை கதாப்பாத்திரங்கள், சென்னை வந்த பிறகு என் மனதை பாதித்த உண்மை கதாப்பாத்திரங்களை வைத்து உருவான கற்பனை கதை இந்த இட்லி கடை. 

Idly Kadai
Idly Kadai Dhanush

உன் பூர்வீகத்துடன் இணைந்திரு எனச் சொல்வார்கள். எது நம் அடையாளம்? நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போகவேண்டும், அது சமூகத்தில் நமக்கு மரியாதை அந்தஸ்து கொடுக்கும். நம் வாழ்வாதாரமாக மாறும். நம் அடையாளம் நம் பூர்வீகம் தான். நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் கரைய கூடாது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அது நினைவுகளாக தொடர வேண்டும். இந்த முன்னோர்களின் மூச்சு காற்றும், நம் மண்ணுடைய சாமியும் கலந்தது தான் குலதெய்வம். இங்கிருக்கும் எத்தனை பேர் குலதெய்வம் கோவிலுக்கு போகிறீர்கள் என எனக்குத் தெரியாது. செல்பவர்களுக்கு வாழ்த்துக்கள், செல்லாதவர்கள் தயவு செய்து செல்லுங்கள். ஒரு சில விஷயங்களை நாம் மறந்து போகிறோம். எப்படி இறை தேடி செல்லும் பறவை திரும்ப தன் கூட்டுக்கு வருகிறதோ, வாழ்க்கை தேடி எந்த திசைக்கு போனாலும் வந்த வழியை நாம் மறக்கக் கூடாது. அதை சொல்லும் படம் தான் இந்த இட்லிக்கடை. மெசேஜ் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் உங்களுக்கு நான் சொல்லாமல் யார் சொல்வார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கையில் நான் விளையாடிய தெருக்களில், நான் வாழ்ந்த வீட்டில், நான் சாப்பிட்ட இட்லிக்கடையில், நான் கும்பிட்ட கருப்பசாமி கோவிலில் என எல்லா இடத்திலும் படப்பிடிப்பு நடத்தினோம். மனதிற்கு மிக நெருக்கமான படப்பிடிப்பாக இது இருந்தது. இதில் என் பாட்டியும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 

நிறைய ரசிகர்கள் நான் இப்போது சந்திக்கிறேன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். தொடர்ந்து இன்னும் நிறைய பேரை நான் சந்திப்பேன். அப்படி உங்களை நான் சந்திக்கும் போது நிறைய பேர் என்னிடம், நான் டாக்டர், நான் ஆர்க்கிடெக்ட், நான் ஐ ஏ எஸ் படிக்கிறேன் என சொல்வது மனதிற்கு நெகிழ்வாக இருக்கிறது. ஒரு சினிமா ரசிகனாக என்னை ரசிப்பதோடு நிறுத்திவிட்டு, உங்கள் வாழ்வை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறீர்கள் என நினைப்பது பெருமையாக இருக்கிறது." எனப் பேசினார் நடிகர் தனுஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com