குன்னூர் தொகுதியில் ஒரு வீட்டில் 79 வாக்காளர்கள்? புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்த உண்மை!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோடேரி வாக்குச்சாவடி எண் 210இல் ஒரே கதவு எண்ணில் 79 வாக்குகள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த கதவு எண்ணில் உண்மையில் 4 வாக்களர்களே இருப்பது கள ஆய்வில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கோடேரி, மேல்கோடேரி, கோடேரி வேலி, ஆலடா வெலி ஆகிய கிராமங்களில் மேற்பட்ட 300-க்கும் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அன்று வாக்காளர் விரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், கோடேரி வாக்குச்சாவடி எண் 210-இல் உள்ள மேல் கோடேரி பகுதியில் கதவு எண் 11-இல் 79 வாக்காளர்களும், கதவு எண் 12 -இல் 33 வாக்காளர்களும், கதவு எண் 9-இல் 14 வாக்காளர்களும், கதவு எண் 10-இல் 9 வாக்காளர்களும் உள்ளதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருகிற சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிகரப்பட்டி ஊராட்சி 12-வது வார்டு உறுப்பினர் மனோகரன் அண்மையில் சரிபார்த்தபோது வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில், கதவு எண் 11-இல் 79 வாக்காளர்கள் உள்ளதாகக் கூறப்பட்ட வீட்டில், நான்கு வாக்காளர்களே உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், கதவு எண் 9-இல் 14 வாக்காளர்கள் உள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், இரண்டு வாக்காளர்களே உள்ளதாகவும், அவர்களும், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கதவு எண் 10-இல் ஒன்பது வாக்காளர்கள் உள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், 4 வாக்காளர்களே உள்ளனர் என்பதும் கதவு எண் 12-இல் 33 வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள நிலையில், 3 வாக்காளர்களே உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது அப்பகுதி, மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், வாக்காளர் குளறுபடிகள் குறித்து 79 வாக்காளர்கள் கொண்ட குடியிருப்பின் உரிமையாளர் ஆனந்தன் கூறும் போது, “இந்த தகவல் எனக்கே ஆச்சர்மாக உள்ளது. இதுவரை எங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் சென்று வாக்களித்து வந்துள்ளோம். மீதி 75 பேர் யார் என்று தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து, அதிகரட்டி பஞ்சாயத்து 12ஆவது வார்டு உறுப்பினர் மனோகரன் தெரிவிக்கையில், “ஒரு கதவு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பெரும் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் வட்டாட்சியர் அதிகாரி ஜவகர் வெர்ஷன், “கோடேரி கிராமத்தில் வாக்காளர் விரைவு பட்டியலில் வார்டு எண் 11 என்பது கதவு எண்ணாக பதிவாகியுள்ளது, இதுகுறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் புதிய கதவு எண்களையும் கேட்டுள்ளதாகவும், வீடுகளுக்கு புதிய கதவு எண் வழங்கும்போது இந்த குளறுபடிகள் நீங்கும்” என அவர் தெரிவித்தார்.
குன்னூர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் குளறுபடி நடப்பது புதிது கிடையாது. ஏற்கெனவே, 2024 மக்களவைத் தேர்தலின் போதும், குன்னூர் சட்டப்பேரவைக்கு உட்பட்ட வெலிங்டன் சிங்காரதோப்பு பகுதியில் உள்ள வாக்களர்களின் பெயர்கள் இரண்டு இடங்களில் இருந்ததும், மேலும் இறந்து போனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததும் கண்டறியப்பட்டிருந்தது. இந்தநிலையில், குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் அதிகளவில் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.