மனோஜ் பாண்டியன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

திமுகவில் ஐக்கியம் | யார் இந்த மனோஜ் பாண்டியன்? முடிவின் பின்னணி அரசியல் கணக்கு என்ன? - ஓர் அலசல்

கடந்த சில தினங்களாக கடும் அதிருப்தியில் இருந்துவந்ததாகச் சொல்லப்படும் மனோஜ் பாண்டியன், தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்.

PT WEB

கடந்த சில தினங்களாக கடும் அதிருப்தியில் இருந்துவந்ததாகச் சொல்லப்படும் மனோஜ் பாண்டியன், தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் இன்றைய தினம் முக்கிய நிகழ்வாக கூற வேண்டுமென்றால் அது அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துதான். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.ஆக தேர்வு செய்யப்பட்டவர். இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாக மாறினார். கடந்த சில தினங்களாக கடும் அதிருப்தியில் இருந்துவந்ததாகச் சொல்லப்படும் மனோஜ் பாண்டியன், தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, திராவிடக்கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராகவும், தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் திமுகவில் இணைந்ததாக மனோஜ் பாண்டியன் கூறியிருக்கிறார்.

யார் இந்த மனோஜ் பாண்டியன்?

அதிமுக நிறுவனத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன், மனோஜ் பாண்டியன் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கு வழக்கறிஞர், அரசியல்வாதி, முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி என பல்வேறு முகங்கள் உண்டு. அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, 2001 ஆம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியிலும், 2021 ஆம் ஆண்டு ஆலங்குளம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 முதல் 2016 வரை அதிமுக சார்பில் மாநிலங்களை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அடிப்படையில் இவர் வழக்கறிஞர் என்பதால், கட்சி தொடர்பான வழக்குகளை இவர் கவனித்து வந்தார். சமீபத்தில் இணைந்த அன்வர் ராஜா, மைத்ரேயனைத் தொடர்ந்து தற்போது மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்திருக்கிறார். இது திமுகவிற்கு சிறிய அளவில் பலன் தரும் என கூறும் பத்திரிகையாளர் ப்ரியன், எதிர்காலத்தை கணக்கில் கொண்டே மனோஜ் பாண்டியன் திமுவில் இணைந்திருப்பதாகவும் கூறுகிறார்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடித்தவர் மனோஜ் பாண்டியன் என்பது கவனித்தக்கது.

மனோஜ் பாண்டியன் நினைப்பது என்ன?

இது தொடர்பாகப் பேசிய பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “மனோஜ் பாண்டியனின் தந்தை பி.ஹெச். பாண்டியன் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் உதவி சபாநாயகராக இருந்தவர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எம்ஜிஆரால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். பி.ஹெச். பாண்டியன், மனோஜ் பாண்டியன் எல்லாம் 'அதிமுகவிற்கு நெருக்கமான குடும்பம்' என்றுதான் சொல்ல வேண்டும்.

தராசு ஷ்யாம்

அவர் என்னதான் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்திருந்தாலும், அதிமுக எம்.எல்.ஏவாகவும், அதிமுக மூத்த உறுப்பினராகத்தான் பார்க்கப்படுவார். ஒரு அரசியல்வாதி தனது அடுத்தக்கட்ட வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும். அடுத்த தேர்தல் வரும்போது நமது தொகுதியிலேயே நம்மால் வெற்றி பெற முடியுமா? மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியுமா? என்பது போன்ற கவலைகள் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருக்கும்.

தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு எதிரான வாக்குவங்கி அல்லது அதிமுக வாக்குவங்கியின் சிதைவு என்பதை மனோஜ் பாண்டியன் உணர்ந்து கொண்டார். எனவே, மீண்டும் ஆலங்குளத்தில் போட்டியிடக்கூடிய வாய்ப்பை திமுக வழங்கினால், திமுக கூட்டணியில் நாம் வெற்றிபெற்றுவிட முடியும் என நினைக்கிறார்” என்றார்.

பாஜகவின் பொம்மலாட்டம்

இதுதொடர்பாகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் போன்றோர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அந்த அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும், எப்படிப்பட்ட கூட்டணியை அவர்களால் அமைக்க முடியும், எம்மாதிரியான அரசியலை அவர்கள் செய்தால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடவை ஏற்படுத்த முடியும் என்பதுபோன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. இவைகளில் குழப்பங்களாகவும், சந்தேகத்திற்கு உரிய வகையிலும் இருப்பதால் மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்பதால் திமுகவிற்கு வந்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளர் ப்ரியன்

மனோஜ் பாண்டியன் சொல்வதில் ஒரு விஷயம் மிக முக்கியமானது. பாஜக தான் அதிமுகவின் அரசியலை செய்துகொண்டிருக்கிறார்கள்; தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என யாராக இருந்தாலும் பாஜகதான் எல்லோரையும் பொம்மலாட்டம் போல் ஆட்டிவைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் மானோஜ் பாண்டயனின் கருத்தாக இருக்கிறது.

இன்னொன்று, பாஜகவை எதிர்ப்பதில் திமுக தெளிவாக இருப்பதால் அந்த அணியில் இருப்பது தனது எதிர்கால அரசியலுக்கு சரியாக இருக்குமென மனோஜ் பாண்டியன் முடிவெடுத்திருக்கிறார். மருது அழகுராஜ், மைத்ரேயன், அன்வர் ராஜா என தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அதிமுகவுக்கும் சரி, எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பவர்களுக்கும் சரி அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதால்தான் இம்மாதிரியான மாற்றங்கள் நிகழுவதை பார்க்கிறோம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஓபிஎஸ் தரப்பு எம்மாதிரியான அரசியலை செய்வார்கள் என்பது தெரியாத சூழலில், நிரந்தரமாக, வலிமையான கூட்டணியைக் கொண்ட கட்சியில் இணைய வேண்டுமென்பதை மனோஜ் பாண்டியன் முடிவெடுத்திருக்கிறார்.

சமூகங்கள் சார்ந்து யாரும் வாக்களிக்கப்போவதில்லை என்றாலும், மனோஜ் பாண்டியன் போன்றோர் சேர்ந்திருப்பது அந்த சமூகத்தின் மத்தியில் திமுகவிற்கு இருக்கும் ஆதரவை இன்னும் அதிகரிக்கும் என நினைக்கிறேன். திமுகவின் செல்வாக்கை பெரியளவில் அதிகரிக்காது என்றாலும், நெல்லை பகுதிகளில் இது ஓரளவுக்கு உபயோகமாக இருக்கும்” என்றார்.