cm vijay - sivakumar pt
தமிழ்நாடு

மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார்? விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்! - சிவக்குமார்

மாற்றம் வேண்டும் என காமராஜரையே மக்கள் தோற்கடித்தார்கள், மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார் என்று நடிகர் சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Rishan Vengai

விஜயின் அதிவேக அரசியல் எழுச்சியை முன்னிட்டு, மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என நடிகர் சிவக்குமார் விளக்குகிறார். காமராஜர் காலத்திலிருந்தே மக்கள் மாற்றத்தைத் தேர்ந்தெடுத்து வரலாறு படைத்துள்ளனர் என அவர் நினைவூட்டுகிறார். 95% பேர் காசு வாங்காமல் வாக்களித்த இந்தத் தேர்தலில், மக்களின் தீர்ப்பை விமர்சிப்பது தவறு; அடுத்த தலைமுறைக்கு சரியான தலைவரைத் தேர்ந்தெடுத்த முடிவை மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. பெரும்பான்மை இல்லாத போதிலும் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் உள்ளார். அவரது அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியை கைப்பற்றியிருப்பது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

CM Vijay

ஒரு தரப்பினர் விஜய்க்கு வாக்களித்ததை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார் என்று நடிகர் சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்!

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய நடிகர் சிவக்குமார், “விஜய் நினைத்து சந்தோசம் பட வேண்டும். அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள் என்று தான் மக்கள் வாக்களித்து உள்ளவர்கள். மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம். காமராஜரை போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா? அவர் இருக்கும் பொழுது அவருக்கு சொத்து என்பது வெறும் 140 ரூபாய் பணம், 4, 5 துணிமணிகள், சில புத்தகங்கள் மற்றும் ஜோடி செருப்புகள் தான் இருந்தன. அப்படிப்பட்ட காமராஜரையே தோற்கடித்தார்கள். காமராஜர் வேண்டாம், மாற்றம் தான் வேண்டும் என்று அப்பொழுது மக்கள் நினைத்தார்கள்.

திமுகவும் 59 ஆண்டுகள் ஆண்டது, தற்பொழுது அதுவும் வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள். யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள், மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள். மக்கள் என்ன முடிவு செய்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார்?

இந்த தேர்தலில் 95 சதவிகிதம் காசு வாங்காமல் ஓட்டு போட்டு உள்ளார்கள், பெண்கள் அதிகமானோர் ஓட்டு போட்டு உள்ளார்கள். அடுத்த தலைமுறை எங்களுக்கு ஒரு சரியான தலைவன் வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுது அதனை தவறு என்று கூறுவதற்கு நீங்கள் யார்?

மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும் சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள். மக்களுக்கு அறிவு வந்தால் எதற்கு படம் பார்க்கிறார்கள்?” என்று பேசியுள்ளார்.