தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. மோடியிடம் விஜய் முன்வைத்த 4 கோரிக்கைகள் என்ன?
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக தனிக்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஎம்யூஎல் உள்ளிட்ட ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. சட்டப்பேரவையில், அவ்வரசுக்குக் கிடைத்த நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு காங்கிரஸ், ஐஎம்யூஎல், விசிக உள்ளிட்ட ஆதரவுக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் தவெக இடம் கொடுத்துள்ளது. முன்னதாக, முதல்வராக பொறுப்பேற்ற விஜய், திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தார்.
தொடர்ந்து, மே இறுதி வாரத்தில் பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் தான், 2 நாள் சுற்றுப் பயணமாக முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தார். தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார். 30 நிமிடங்களுக்கு நடைபெற்ற இந்த சந்திப்பில், பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, காவிரி குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதி தரக்கூடாது, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும், வான்வழி அமைப்பு மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும், இலங்கை சிறைபிடித்த 58 மீனவர்கள், 266 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முதல்வர் விஜய் பிரதமர் மோடியிடம் முன்வைத்துள்ளார்.

