அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை pt
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. கைதானவரின் பகீர் பின்னணி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் ஞானசேகரின் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Rishan Vengai

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் ஞானசேகரின் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே பாலியல் வன்கொடுமை..

அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவர் ஒருவரும், இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவரும் நேற்று முன்தினம் இரவு சுமார் 8:30 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் சம்பந்தப்பட்ட மாணவரை அடித்து காயப்படுத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் தீவிர விசாரணை..

புகாரின் அடிப்படையில் காவல் இணை ஆணையர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை முதல் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை என்ற பிரிவின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் குறிப்பாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களா? விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களா? அல்லது வெளி நபர்களா? அல்லது அங்கேயே தங்கி கட்டட தொழில் செய்து வரும் தொழிலாளிகளா? யார் யார் உள்ளே வந்தார்கள்? யார் யார் வெளியே சென்றார்கள். உள்ளே வந்ததில் மர்ம நபர்கள் யார்?என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பகீர் பின்னணி..

வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிவியல்பூர்வ ஆதாரங்களின் படி கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர்ன என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞானசேகரன்

இவர் கோட்டூர்புரத்தில் நடைபாதை பிரியாணி கடை வைத்திருப்பவர் என்று தெரியவந்த நிலையில், அவர் வேறுஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன. தகவலின் படி, பிரியாணி கடை வைத்திருக்கும் ஞானசேகரன் பிரியாணி விற்பனை முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழக காட்டுப்பகுதிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வளாகத்தில் தனிமையில் உள்ள காதலர்களை மொபைலில் படம் பிடித்து மிரட்டியும், வீடியோவை காட்டி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 2011-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார் என காவல் துறை கைது செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.