"Head-க்கு எப்படி சதமடிக்க வேண்டும் என்பது தெரியும்"- ஆகாஷ் தீப் கருத்துக்கு முன்.ஆஸி கேப்டன் பதில்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது போட்டி, நாளை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களுடன் பேசிய இந்திய கிரிக்கெட்டர் ஆகாஷ் தீப், “டிராவிஸ் ஹெட்டிக்கு எதிராக நாங்கள் திட்டங்களை வைத்துள்ளோம். அவருக்கு ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் பிரச்னை இருக்கிறது, நாங்கள் அவரை அதிக ரன்களுக்கு செல்லாமல் தடுக்கும் திட்டத்தோடு வருவோம்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் ஆகாஷ் தீப் கருத்திற்கு பதில் கொடுத்திருக்கும் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க், டிராவிஸ் ஹெட்டுக்கு எப்படி சதமடிக்க வேண்டும் என்பது தெரியும் என கூறியுள்ளார்.
அவருக்கு எப்படி சதமடிக்க வேண்டும் என்பது தெரியும்..
இந்திய அணி குறித்தும் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிரான அவர்களுடைய திட்டம் குறித்தும் பேசியிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க், “இந்தியர்கள் வெளியே வந்து அப்படிச் சொல்வதை நான் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அந்த வார்த்தைகளை டிராவிஸ் ஹெட்டின் மனதில் வைக்க விரும்புகிறார்கள். ஆனால் டிராவிஸ் ஹெட் ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாடிவருகிறார். பழைய பந்தை முழுமையாக பயன்படுத்தி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுகிறார். அவர் தன்னுடைய அதிரடியான கிரிக்கெட் விளையாடும் பிராண்ட்டின் மீது முழுமையான நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இந்திய வீரர்கள், அதிகமான பந்துகளை சந்திக்கவிடாமல் அவரை வெளியேற்ற வேண்டும். டிராவிஸ் ஹெட் 10 அல்லது 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துவிட்டு ஆட்டமிழந்தால் கூட அது சிறப்பாக ஆட்டம்தான். ஆனால் அவர் 40-50 ரன்களை தொட்டுவிட்டால் பெரிய சதங்களை எப்படி அடிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்” என விக்கெட் போட்காஸ்ட்டில் பேசியுள்ளார்.