1975-லேயே 85,000 பார்வையாளர்கள்.. பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன? வரலாற்று சம்பவங்கள் தொகுப்பு!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் பல வரலாற்று சம்பவங்களை கொண்டிருக்கிறது. உதாரணமாக
இலங்கை ஜாம்பவான் பந்துவீச்சாளர் முரளிதரன் பந்தை அடிப்பது போல் த்ரோ செய்வதாக 3 ஓவரில் 7 நோ-பால்கள் கொடுக்கப்பட்டது
50 வருடங்களுக்கு முன்பே 85,000 கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தது
ஷேன் வார்னேவின் டெஸ்ட் ஹாட்ரிக் மற்றும் 700-வது விக்கெட்
பிரட்லீயின் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள்
விராட் கோலி சதம்
அதிகபட்சமாக 91,092 பார்வையாளர்கள்
என பல வரலாற்று சம்பவங்கள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நடந்துள்ளது. அப்படியான சில வரலாற்று சம்பவங்களை, இக்கட்டுரையில் அறியலாம்.
பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன?
முதலில் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன என பார்ப்போம்.
பொதுவாக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளானது கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் டிசம்பர் 26 அன்று காமன்வெல்த் நாடுகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்படுகின்றன. ஆனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பிரபலமாக ஆஸ்திரேலியாவின் ஐகானிக் ஸ்டேடியமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) நடைபெறும் போட்டிகள் பார்க்கப்படுகின்றன.
டிசம்பர் 26 அன்று நடைபெறும் போட்டிகள் ஏன் பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பாரம்பரியமாக அன்றைய தினம் தேவாலயங்களில் அன்னதான பெட்டிகள் திறக்கப்பட்டதால் இன்றைய தினத்திற்கு அன்பாக்ஸிங் டே என்பது ‘பாக்ஸிங் டே’ என பெயர் வந்ததாக பெரும்பாலோனோர் கூறுகிறார்கள்.
மற்ற சிலர் கிறிஸ்துமஸ் தினத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு டிசம்பர் 26 அன்று பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் அதனால் இந்த பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர். மேலும் பாக்ஸிங் டே என்பது, புனித ஸ்டீபனின் பண்டிகை நாளாகவும் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
எப்போதிலிருந்து பாக்ஸிங் டே போட்டிகள் நடத்தப்படுகின்றன?
பாக்ஸிங் டே போட்டிகளின் வரலாறு 1892-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி MCG-ல் நடைபெற்றது மூலம் தொடங்கியது. இருப்பினும் குறிப்பிட்ட டிசம்பர் 26 அன்று நடைபெறும் தேதியில் அந்த போட்டி நடத்தப்படவில்லை.
முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியானது 1950-51 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது விளையாடப்பட்டது. அந்த ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட்டானது கிறிஸ்துமஸ் வரை டிசம்பர் 22 முதல் 27 வரை விளையாடப்பட்டது. அந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டமே பாக்ஸிங் டே தினமாக இருந்தது. முதல் பாக்ஸிங் டே போட்டியில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
1952-ல் தென்னாப்பிரிக்காவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, 1953 முதல் 1966 வரை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. பின்னர் இந்தியாவுக்கு எதிராக 1967-ல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால் அது மெல்போர்னில் நடைபெறாமல் அடிலெய்டு ஓவலில் நடைபெற்றது. இந்தப்போட்டி டிசம்பர் 23 அன்று தொடங்கி நடைபெற்றது.
பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு புகழ்பெற்ற MCG மைதானத்திற்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியின் போது திரும்பியது. ஆனால் அது டிசம்பர் 26 அன்று தொடங்கப்படவில்லை, மாறாக ஆண்டின் காலண்டர் மாறிமாறி வந்ததால் போட்டிகளில் அடிலெய்டு ஓவல் மைதானங்களில் நடத்தப்பட்டது.
பின்னர் 1980-ம் ஆண்டுக்கு பிறகு மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உரிமைகளைப் பெற முடிவு செய்தன. அதற்குபிறகு MCG-ல் பாக்ஸிங் டே நாளில் ஒரு டெஸ்ட் போட்டியின் வருடாந்திர பாரம்பரியத்தைத் கொண்டு நடத்தப்பட்டுவருகிறது.
நடைபெற்ற வரலாற்று சம்பவங்கள்!
1975 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியின் முதல் நாளில் MCG-ல் கிட்டத்தட்ட 85,000 பார்வையாளர்கள் போட்டியை காண குவிந்தனர்.
அதற்கு அடுத்த படியாக 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட்டின் போது, MCG மைதானத்தில் 91,112 பார்வையாளர்கள் குவிந்தனர். அதுவே பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இடம்பெற்ற அதிகப்படியான பார்வையாளர்களை கொண்டுள்ளது.
1995-ம் ஆண்டு இலங்கை அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் பந்தை அடிப்பது போல் துரோ செய்வதாக கூறி, நடுவர் டேரல் ஹேர் அவர்வீசிய 3 ஓவர்களில் 7 முறை நோ-பால் கொடுத்தார். இதை பார்த்து கோவமுற்ற இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா போட்டியை பாதியில் நிறுத்தி கிரவுண்டிலிருந்து வெளியேறினார். இதற்குபிறகு முரளிதரனின் பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் த்ரோ செய்யவில்லை என்று கூறப்பட்டது.
1994-ல் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே போட்டியில் ஹாட்ரிக் சாதனையைப் பதிவு செய்தார். பின்னர் 2006-ல் நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி தனது 700வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.
1988-ம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.
1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஸ்டீவ் வாஹ் தனது டெஸ்டில் அறிமுகமானார்.
1999-ல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே தினத்தில் அறிமுகமாகி தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
1989-ம் ஆண்டு வரலாற்றில் ஒரேயொரு முறையாக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே ODI போட்டியாக நடத்தப்பட்டது
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா ரெக்கார்ட்..
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 12 இந்திய பேட்ஸ்மேன்கள் சதங்களை அடித்துள்ளனர். அதில் சச்சின் டெண்டுல்கர், கேஎல் ராகுல், அஜிங்கியா ரஹானே முதலிய 3 வீரர்கள் இரண்டு சதங்களை அடித்துள்ளனர்.
மெல்போர்னில் MCG மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் (116), விரேந்திர சேவாக் (195), விராட் கோலி (169), அஜிங்கியா ரஹானே (147, 112), புஜாரா (106) முதலிய வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விளையாடியிருக்கும் இந்திய அணி ஐந்து முறை தோல்வி, இரண்டு வெற்றி மற்றும் இரண்டு முறை டிராவை பதிவுசெய்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விளையாடி 2 வெற்றிகளை இந்தியா பதிவுசெய்துள்ளது.