அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!
என்ன நடந்தது?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவர் ஒருவரும், இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவரும் நேற்று முன்தினம் இரவு சுமார் 8:30 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் சம்பந்தப்பட்ட மாணவரை அடித்து காயப்படுத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் தீவிர விசாரணை..
புகாரின் அடிப்படையில் காவல் இணை ஆணையர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை முதல் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை என்ற பிரிவின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களா? விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களா? அல்லது வெளி நபர்களா? அல்லது அங்கேயே தங்கி கட்டட தொழில் செய்து வரும் தொழிலாளிகளா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வரும் மாணவர்கள் உள்ளிட்ட பிறநபர்களை தீவிர சோதனை செய்த பிறகே காவலாளிகள் உள்ளே அனுப்பி வருகின்றனர்.
2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.. சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை..
இதனிடையே மாணவியுடன் இருந்த மாணவர், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த காவலாளிகள், பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளிகளிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
விடுதிகளுக்கு தண்ணீர் கேன், காய்கறி, மளிகை பொருட்கள் சப்ளை செய்பவர்கள் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், விடுதி வார்டன்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மாணவியிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அவருக்கு தற்போது மன நல ஆலோசனையானது வழங்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் தொடர் விசாரணையில், சந்தேக நபர் ஒருவரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் கைதாகியுள்ளார். மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு, விசாரணை செய்த பிறகு சந்தேக நபர் குறித்த அடையாள அணிவகுப்பு நடத்து உறுதி செய்யப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் யார்? என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பிரசித்த பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவரை அடித்து மிரட்டி மாணவியை மர்ம நபர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவமானது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.