ஹர்திக் - கங்குலி
ஹர்திக் - கங்குலி web
T20

“கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹர்திக்கின் தவறல்ல” - ரசிகர்கள் Booed செய்வது குறித்து கங்குலி கருத்து!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்துவருகின்றனர்.

‘மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்த ஒரு சாம்பியன் கேப்டனை (ரோகித் சர்மா) இப்படியான முறையில் வெளியேற்றி இருக்க கூடாது’ என கோவத்தில் இருக்கும் ரசிகர்கள், அதனை ஹர்திக் பாண்டியா மீது வெளிப்படுத்தி வருகின்றனர்.

போதாக்குறையாக ஃபீல்டிங்கில் ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா அலைக்கழித்தது ரசிகர்களுக்கு மேலும் கோவத்தை ஏற்படுத்தியது. அதனால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

hardik pandya

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக காட்டப்படும் வெறுப்பு குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதில் ஹர்திக் மீது எந்ததவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா மீது எந்த தவறும் இல்லை!

ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவர் பற்றியும் பேசியிருக்கும் கங்குலி, “ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக முழக்கமிட்டு வருவது தவறான விஷயம் என்று நான் கூறுவேன். ஒரு ஐபிஎல் அணியில் புதியதாக ஒரு கேப்டனை மாற்றுவது என்பது சாதாரண விஷயம். அதற்கும் ஹர்திக் பாண்டியாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ரசிகர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும்.

ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் அவர் ஐபிஎல் அணி மற்றும் இந்திய அணி என இரண்டிலும் முழு அர்ப்பணிப்புடன் விளையாடியுள்ளார். அதில் மாற்றுக்கருத்தில்லை” என்று கூறியுள்ளார்.

ganguly

கங்குலிக்கு முன்னர் இந்த விஷயம் குறித்து பேசியிருந்த மேத்யூ ஹெய்டன், ”ரசிகர்கள் இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். அவர்கள் ரோகித் சர்மாவை அதிகம் நேசிக்கிறார்கள், அதனால் அவர்களால் இங்கு நடக்கும் அரசியலை புரிந்துகொள்ள முடியவில்லை. நான் சொல்வதெல்லாம், இது ஹர்திக் பாண்டியா மீதிருக்கும் தவறுகிடையாது, மும்பை அணி நிர்வாகத்தின் தவறு” என்று கூறியிருந்தார்.

ganguly - rohit

போலவே ரவிசாஸ்திரி கூறுகையில், “இது என்ன இந்திய அணியா? இது ஒரு பிரான்சைஸ் நிர்வாகம். அவர்கள் விரும்பும் வீரர்களை கேப்டனாக நியமிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு” என்று கூறியிருந்தார்.

என்னதான் பலரும் கூறினாலும், ரசிகர்கள் அவர்களுடைய எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்தியே வருகின்றனர்!